Monday, March 8, 2021

19. 18 ஆவது அத்தியாயம் - மோட்ச யோகம்

 1. அர்ஜுனன் கூறினான்:
புஜபலம் மிகுந்தவனே! நான் சந்நியாசம் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஹ்ரிஷிகேசா! தியாகம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன், கேசவா!

2. பகவான் கூறினார்:
பலன்களுக்காகச் செய்யப்படும் செயல்களைக் கைவிடுதல் கற்றவர்களால் சந்நியாசம் என்று அழைக்கப்படுகிறது. செயல்களின் பலனைத் துறத்தல் அனுபவம் உள்ளவர்களால் தியாகம் என்று அழைக்கப்படுகிறது.

3. எல்லாச் செயல்களுமே தீயவை, அவற்றைக் கைவிட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலர் யாகம், தானம், தவம் ஆகிய செயல்களைக் கைவிடக் கூடாது என்று கூறுகிறார்கள்.

4. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! தியாகம் செய்வதைப் பற்றிய உண்மையை நான் கூறுவதைக் கேள். மனிதருக்குள் வேங்கை போன்றவனே! தியாகம் மூன்று வகைகளாக வகுக்கப்பட்டுள்ளது..

5. யாகம், தர்மம், தவம் இவற்றுக்கான செயல்களைக் கைவிடக் கூடாது. இவை செய்யப்பட வேண்டும். யாகம், தர்மம், தவம் ஆகியவை மனிதர்களுக்குள் சிறந்தவர்களைக் கூடத் தூய்மைப்படுத்துகின்றன. 

6. இந்தச் செயல்கள் கூட, கடமைகள் என்று கருதப்பட்டு, செயல்களின் பலன்களில் பற்றைத் துறந்து செய்யப்பட வேண்டும். பார்த்தா! இது என்னுடைய உறுதியான கருத்து.

7. விதிக்கப்பட்டுள்ள கடமைகளைத் துறப்பது முறையல்ல. மாயையின் காரணமாக அத்தகைய செயல்களைத் துறத்தல் தமோ குண இயல்பைக் குறிக்கும்.

8. துயரம் மற்றும் உடலுக்கு சிரமம் அல்லது வேதனையை ஏற்படுத்தும் என்ற, பயம் இவற்றின் காரணமாக ஒரு செயலைத் துறத்தல் ரஜோ குணத்தின் அடிப்படையிலான துறத்தல். இவ்வாறு செய்பவனுக்குத் துறத்தலின் பலன் கிடைக்காது.

9. அர்ஜுனா! விதிக்கப்பட்டுள்ள கடமைகளைத் தன் பொறுப்பு என்று கருதிச் செய்து, அந்தச் செயல்களின் பலன் மீதான பற்றை முழுமையாக ஒருவன் துறந்தால், அதை சாத்விகமான துறத்தல் என்று நான் கருதுகிறேன்.

10. அறிவள்ளவனாகவும், ஐயங்கள் இல்லாதவனாகவும் துறவு மனநிலையில் இருப்பவன், சாத்வீகத்தில் வலுவாக நிலை பெற்று, மகிழ்ச்சி அளிக்காத செயல்கள் மீது வெறுப்பும், மகிழ்ச்சி அளிக்கும் செயல்கள் மீது விருப்பும் இல்லாமல் இருக்கிறான். 

11. உடலில் குடியிருக்கும் ஆத்மாவுக்கு எல்லாச் செயல்களையும் துறப்பது சாத்தியமில்லை. ஆனால் தன் செயல்களின் பலன்களைத் துறந்தவன் துறந்தவன் என்று கருதப்படுகிறான்.

12. செயல்களின் பலன்களைத் துறக்காதவர்களுக்கு, அவர்கள் மரணத்துக்குப் பின், கசப்பான (நரகம்), இனிப்பான (சொர்க்கம்), இரண்டும் கலந்த என்று மூன்று விதமான பலன்கள் உள்ளன. ஆனால் துறந்தவர்களுக்கு இவை இல்லை.

13. வலுவான கரங்களை உடையவனே! எல்லாச் செயல்களையும் செய்வதற்கான ஐந்து காரணங்கள் சாங்கிய தத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள. அவற்றை நான் இப்போது கூறுகிறேன், கேள்.

14. உடல், செய்பவன், பல்வேறு புலன்கள், கணக்கற்ற செயல்கள் மற்றும் ஐந்தாவதாக கடவுள்.

15. ஒரு மனிதனால் அவன் உடலாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தச் செயல்கள் - முறையானவையோ, முறையற்றவையோ - செய்யப்பட்டாலும், அச் செயல்களுக்கான காரணங்கள் இந்த ஐந்தும்தான்.

16. இவ்வாறு இருக்கையில், செயல்களைச் செய்வது ஆத்மாதான் என்று கருதுபவன் சரியான புரிதல் அற்றவன். அறிவற்ற அவனால் எதையும் அறிய முடியாது.

17. தான் என்ற எண்ணம் இல்லாத, தன் செயலுக்கான பலனில் பற்றில்லாத சிந்தனை உடைய ஒருவன் இவ்வுலகில் கொலைகள் புரிந்தாலும், அவன் கொலை செய்யவில்லை. அவன் தன் செயல்களால் பிணைக்கப்பட்டவன் அல்ல.

18. அறிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதலின் நோக்கம், அறிந்து கொள்பவன் இவை செயலை இயக்கும் மூன்று விசைகள். புலன்கள், செயல் மற்றும் செயல் புரிபவன் இவை செயலின் மூன்று அடிப்படைகள்.

19. அறிந்து கொள்ளுதல், செயல், செயல் புரிபவன் என மூன்றும் மூன்று குணங்களின் அடிப்படையில் மூன்று வகையானவை என்று கூறப்பட்டுள்ளது. அவற்றை நான் கூற அறிந்து கொள்.

20. தனித்தனியாகப் பிரிந்திருக்கும் எல்லாப் பொருட்களுக்குள்ளும் அழிவில்லாத, பிரிக்க முடியாத ஒன்று இருப்பதை ஒருவன் அறிந்து கொண்டால்.அந்த அறிவு சாத்வீகமானது என்று அறிந்து கொள்.

21. பல்வேறு பொருட்கள் தனித்தனியே இருப்பதால் அவற்றுக்குள் இருப்பதைப் பலவாகப் பார்க்கும் அறிவு ரஜோ தன்மையுடையது என்று அறிந்து கொள்.

22. எல்லாப் பொருட்களும் ஏதோ ஒன்றுடன் காரணமின்றி இணைந்திருப்பதாக உண்மையை அறியாமல் அர்த்தமற்ற விதத்தில் அறிந்திருப்பது தமோ தன்மை கொண்டது.

23. கட்டுப்பாட்டுடன், பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, செயல்களுக்கான பலன்களில் எந்த விருப்பும் இல்லாமல், விதிக்கப்பட்டபடி செய்யப்படும் செயல்கள் சாத்வீகத்தன்மை உடையவை.

24. செயல்களின் பலன்களில் விருப்பத்துடனோ, தான் என்ற எண்ணத்துடனோ,  அதிக உழைப்புடனோ ஒரு செயலைச் செய்வது ரஜோ தன்மை உள்ளதாகக் கருதப்படுகிறது.

25. மாயையினால் (அறியாமையால்) தொடங்கப்பட்டு, எதிர்கால விளைவுகளைப் பற்றியோ, இழப்பு, (தனக்கோ மற்றவர்களுக்கோ ஏற்படக் கூடிய) துன்பம், செயலைச் செய்து முடிக்கத் தனக்குள்ள திறமை ஆகியவற்றையோ கருதாமல் செய்யப்படும் செயல் தமோ இயல்புடையது.

26. பற்றின்றி, தான் என்ற எண்ணமின்றி, வெற்றி தோல்வியைக் கருதாமல் உற்சாகத்துடன், உறுதியுடன் ஒரு செயலைச் செய்பவன் சாத்வீகமாகச் செயல் புரிபவன் என்று கூறப்படுகிறது.

27. செயலில் பற்றுடனும், செயலின் பலனில் விருப்புக் கொண்டும், பேராசையுடனும், முரட்டுத்தனமாகவும், தூய்மையின்றியும், வெற்றி தோல்விகளால் பாதிக்கப்படும் மனநிலையுடனும் ஒரு செயலைச் செய்பவன் தமோ குணத்துடன் செயல்படுபவன் என்று கருதப்படுகிறான்.

28. முறையற்று, பண்பாடற்று, பிடிவாதமாக, ஏமாற்றும் விதமாக, மற்றவர்களைப் புண்படுத்தும் விதமாக, சோம்பேறித்தனமாக, மனச்சோர்வுடன், தாமதம் செய்தபடி செயல்படுபவன் தமோ குணத்துடன் செயல்படுபவன் என்று கருதப்படுகிறான்.

29. தனஞ்சயா! என்னால் விவரமாக விளக்கப்பட்ட குணங்களின் அடிப்படையில் சிந்தனைத் திறன், மன உறுதி இவற்றின் மூன்று பிரிவுகளை நான் விளக்கிக் கூறுவதைக் கேள்.

30. பார்த்தா! முறையானது-முறையற்றது, செய்யக் கூடியது-செய்யக் கூடாதது, அச்சம்-அச்சமின்மை, பிணைப்பு-விடுதலை இவற்றைப் புரிந்து கொண்டிருக்கும் அறிவு சாத்வீகமானது.

31. பார்த்தா! எது அறம், எது அறத்துக்குப் புறம்பானது, செய்யக் கூடியது எது, செய்யக் கூடாதது என்பதைப் பற்றித் தவறான புரிதல் கொண்ட அறிவு ரஜோ குணமுடையது.

32. பார்த்தா! அறமற்றதை அறமென்றும், எல்லாவற்றையும் விபரீதமாகவும் (முறையற்ற விதத்தில்) புரிந்து கொள்ளும் அறியாமை வயப்பட்ட அறிவு தமோ குணமுடையது.

33. மனம், மூச்சு, புலன்கள், செயல்கள் அனைத்தையும் யோகத்தால் கட்டுப்படுத்தி திசை மாறிச் செல்லாமல் இருக்கும் மன உறுதி சாத்வீகமானது.

34. பார்த்தா! செயல்களின் பலன்களின் மீது உள்ள பற்றின் காரணமாக அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் ஈடுபடுவதில் ஒருவனுக்கு இருக்கும் மன உறுதி ரஜோ இயல்புடையது.

35. கனவு, பயம், வருத்தம், மனச்சோர்வு, ஆணவம் ஆகிவற்றிலிருந்து விடுபட முடியாமல் ஒரு மூடன் அவற்றை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும் உறுதி தமோ இயல்புடையது.

36. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! எதைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவனுக்கு இனிய அனுபவம் ஏற்படுமோ, மற்றும்  துயரத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமோ அந்த இன்பத்தின் மூன்று வகைகளை நான் கூறக் கேள்.

37. ஆரம்பத்தில் விஷம் போலவும், போகப் போக அமிர்தம் போலவும் தோன்றும் இன்பம் சாத்வீக இயல்புடையது. இது ஆத்மஞானத்தால் வருவது.

38. புலன்களுக்கு இன்பம் தரும் பொருட்கள் புலன்களுடன் சேரும்போது வரும் இன்பம் ஆரம்பத்தில் அமிர்தம் போலவும், போகப் போக விஷம் போலவும் போன்றும். இது ரஜோ இயல்பு உடையதாகக் கருதப்படுகிறது.

39. தூக்கத்தாலும், சோம்பேறித்தனத்தாலும்,பொறுப்பின்மையாலும் கிடைக்கும் இன்பம் ஆத்ம ஞானத்தைத் தராமல் துவக்கத்திலிருந்து இறுதி வரை மாயை வசப்பட்டதாக இருக்கும். இது தமோ இயல்பு உடையதாகக் கருதப்படுகிறது.

40. இயற்கையிலிருந்து தோன்றிய இந்த மூன்று குணங்களின் பாதிப்பு இல்லாதவர்கள் யாரும் இந்த உலகத்திலோ, வேறு எந்த உலகத்திலோ, தேவ உலகத்திலோ இருக்க முடியாது.

41. எதிரிகளை வீழ்த்துபவனே! மக்கள் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று செயல்ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது அவர்களுடைய இயல்பான குணங்களின் அடிப்படையில்தான்.

42. மனம் சமநிலையில் இருத்தல், சுயக் கட்டுப்பாடு, தவ வாழ்க்கை, தூய்மை, பொறுமை, நேர்மை, கல்வியறிவு, விவேகம், கடவுள் பக்தி இவை ஒரு அந்தணனுக்கு அவனுடைய இயல்பால் எழும் கடமைகளாகும்.

43. வீரம், சக்தி, உறுதி, திறமை, போர்க்களத்திலிருந்து பின்வாங்காத தன்மை, தாராள குணம், தலைமைப் பண்பு ஆகியவை ஒரு க்ஷத்திரியனுக்கு இயல்பாக அமைந்த செயல்களாகும்.

44. பயிர் செய்தல், பசுக்களைப் பாதுகாத்தல், வணிகம் ஆகியவை ஒரு வைசியனுக்கு அவன் இயல்பால் அமைந்த கடமை ஆகும். மற்றவர்களுக்குச் சேவை செய்வது ஒரு சூத்திரனுக்கு அவன் இயல்பால் அமைந்த செயல் ஆகும்.

45. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் ஒருவனால் முழுமை அடைய முடியும். தன் கடமைகளைச் செய்வதன் மூலம் ஒருவன் முழுமை அடைவது எப்படி என்பதை நான் கூறக் கேள்.

46. எவரிடமிருந்து எல்லாப் பொருட்களும் தோன்றினவோ, எவர் அனைத்துள்ளும் புகுந்தவராக இருக்கிறாரோ, அவரைத் தன் கடமைகள் மூலம் (கடமைகளைச் செய்வதன் மூலம்) வணங்குவதால் ஒருவன் முழுமை அடைகிறான்.

47. மற்றவர்களுக்கான கடமையைச் சிறப்பாகச் செய்வதை விடத் தன் கடமையைக் குறைகளுடன் செய்வது சிறப்பானது. தன் இயல்புக்கேற்றபடி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் ஒருவனுக்குப் பாவம் ஏற்படாது.

48. குந்தி மைந்தனே! ஒருவர் இயல்புக்கு ஏற்றபடி விதிக்கப்பட்ட கடமை,  குறையுள்ளதாக இருந்தாலும் அது ஒருபோதும் கைவிடப்படக் கூடாதது. நெருப்பைப் புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாச் செயல்களும் குறைகளால் சூழப்பட்டவைதான். 

49. பற்றற்ற மனம் கொண்டு, எல்லா இடங்களிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஆசைகளிலிருந்து விடுபட்டவனாக இருக்கும் ஒருவன் துறவின் மூலம் செயல்களிலிருந்தும் அவற்றின் எதிர்வினைகளிலிருந்தும் விடுதலை பெறுகிறான். 

50. குந்தி மைந்தனே! சித்தி (முழுமை) அடைந்தவன் எவ்வாறு உயர்ந்த அறிவான பிரம்மத்தை அடைகிறான் என்பதை என்னிடமிருந்து சுருக்கமாக அறிந்து கொள்.

51-53. தூய்மையான அறிவுடன், மன உறுதியின் மூலம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, புலனுக்கு இன்பம் அளிக்கும் ஒலி முதலியவற்றைத் துறந்து, விறுப்பு-வெறுப்புகளைக் கைவிட்டு, தனிமையான இடத்தில் இருந்து கொண்டு, உணவைக் குறைத்துக் கொண்டு, மனம், வாக்கு, உடல் இவற்றைக் கட்டுப்படுத்தி, எப்போதும் தியானத்திலும், யோகத்திலும் நிலைபெற்று,  பற்றற்ற தன்மையைக் கடைப்பிடித்து, தான் என்ற எண்ணம், வலிமை, கர்வம், ஆசை, கோபம், பொருட்களைப் பெறுவதில் விருப்பம் ஆகியவற்றைக் கைவிட்டு, தன்னுடையது என்ற எண்ணம் இன்றி, அமைதியுடன் இருப்பவன் பிரம்மத்தை அடையத் தகுதி பெறுகிறான்.

54. பிரம்மத்துடன் ஒன்று பட்டவனாக, ஆனந்தத்தில் ஆழ்ந்தவனாக வருத்தங்கள், ஆசைகள் இல்லாதவனாக, எல்லா உயிர்களிடமும் ஒரே மன நிலையில் இருக்கும் அவன் என்னிடம் உயர்ந்த பக்தி கொள்ளும் நிலையைப் பெறுகிறான்.

55. பக்தியின் மூலம் ஒருவன் என்னை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு என்னை உண்மையாக அறிந்ததும் அவன் எனக்குள் புகுகிறான்.

56. எப்போதும் செயலில் ஈடுபட்டிருந்தாலும், என்னைச் சரண்டபவன், என் அருளால் நிலையான அழிவற்ற விடுபேற்றை அடைகிறான்.

57. மனதளவில் எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, அடைய வேண்டிய உயர்ந்த இலக்காக என்னைக் கருதி, மனதைச் சமநிலையில் வைத்திருக்கும் யோகத்தைக் கடைப்பிடித்து எப்போதும் என்னையே சிந்தித்திரு.

58. உன் மனம் என்னிடத்தில் நிலை பெற்றிருக்கும்போது, என் கருணையால் நீ எல்லாத் தடைகளையும் வெற்றி கொள்வாய். ஆனால் தான் என்ற எண்ணத்தால் என் பேச்சைக் கேட்காவிட்டால் நீ அழிந்து விடுவாய்.

59. தான் என்ற எண்ணத்தால் இயக்கப்பட்டு, போர் செய்ய மாட்டேன் என்று நீ முடிவு செய்தால் அந்த முடிவு வீணானதாக இருக்கும். உன் இயல்பே உன்னைப் போரில் ஈடுபடச் செய்யும். 

60. குந்தியின் மைந்தனே! உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மாயையால் நீ செய்ய விரும்பாமல் இருந்தாலும், உன் இயல்பினால் அவற்றை உன்னை அறியாமலே நீ செய்ய வேண்டி இருக்கும்.

61. ஓ, அர்ஜுனா! எல்லோருடைய இதயத்திலும் வசிக்கும் ஈஸ்வரன் தன் மாயையினால் எல்லா உயிர்களையும் இயந்திரத்தில் அமர்ந்து பயணம் செய்வது போல் இயங்கச் செய்கிறார்.

62. பரத வம்சத்தைச் சேர்ந்தவனே! அவரையே முழுமையாகச் சரணடை. அவர் அருளால் உனக்கு எல்லாம் கடந்த அமைதியும், நிலையான வீடுபேறும் கிடைக்கும். 

63. ரகசியங்களில்லாம் அதி ரகசியமான விஷயத்தை நான் இவ்வாறாக உனக்கு விளக்கிச் சொல்லி இருக்கிறேன். அதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த பின் நீ விரும்பியவாறு செயல்படு.

64. உயர்ந்த ரகசியமான விஷயங்களை நான் மீண்டும் கூறக் கேள். நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்பதால் உன் நன்மைக்காக நான் இதை வெளிப்படுத்துகிறேன்.

65. உன் மனத்தை என் மீது நிலை பெறச் செய். என்னுடைய பக்தனாகவும், என்னை வணங்குபவனாகவும் இரு. என்னை வணங்கு. நீ நிச்சயம் என்னை வந்தடைவாய். நீ எனக்குப் பிரியமானவன் என்பதால் உனக்கு நான் இதை அறுதியிட்டுச் சொல்கிறேன்.  

66. எல்லா தர்மங்களையும் (விதிக்கப்பட்ட கடமைகளையும்) கைவிட்டு என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். கலக்கம் அடையாமல் இரு.

67. தவம் இல்லாத ஒருவனுக்கோ, பக்தி இல்லாத ஒருவனுக்கோ, ஆன்மீக சேவையில் ஈடுபடாத ஒருவனுக்கோ, என் மீது வெறுப்பு கொண்ட ஒருவனுக்கோ இதை நீ ஒருபோதும் சொல்லக் கூடாது.

68. மிக ரகசியமான இந்த விஷயத்தை என் பக்தர்களுக்கிடையே பரப்புபவன் எவனும் பக்தியால் உயர்ந்த நிலையை அடைந்து என்னிடத்தில் வந்து சேர்வான். இதில் எந்த ஐயமும் இல்லை.

69. அத்தகைய ஒருவனை விட எனக்குப் பிரியமானவர்கள் மனிதர்களுக்குள் வேறு எவரும் இல்லை, எதிர்காலத்திலும் இவ்வுலகில் அவ்வாறு யாரும் இருக்கவும் மாட்டார்கள்.

70. நம்மிடையேயான இந்த உரையாடலைப் படிக்கும் ஒருவன் யாகத்தின் மூலமும் ஞானத்தின் மூலமும் என்னை வணங்கியவனாகிறான். இது என் நிச்சயமான கருத்து.

71. நம்பிக்கையுடனும், பொறாமையின்றியும் இதைக் கேட்கும் ஒருவன் கூட விடுதலை பெற்று, நற்செயல்கள் மூலம் அடையப்படும் உயர்ந்த உலகங்களை அடைவான்.

72. பார்த்தா? இதை நீ உன் முழு மனதையும் செலுத்தி கவனமாகக் கேட்டாயா? மாயாயினால் ஏற்பட்ட அறியாமை நிங்கி விட்டதா, தனஞ்சயா?

73. அர்ஜுனன் கூறினான்:
உன் அருளால் என் மாயை அகன்று என் அறிவு எனக்குத் திரும்பக் கிடைத்து விட்டது. இப்போது என் மனம் சமநிலை அடைந்து என் ஐயங்கள் மறைந்து விட்டன. நான் இப்போது உன் வார்த்தைகளைப் பின்பற்றி நடப்பேன்.

74. சஞ்சயன் கூறினான்:
வாசுதேவனுக்கும் உயர்ந்த ஆத்மாவான அர்ஜுனனுக்கும் நிகழ்ந்த உரையாடலை இவ்விதமாக நான் கேட்டேன். நான் கேட்டது மிகவும் அற்புதமானது, மெச்சிலிர்க்க வைக்கக் கூடியது.

75. வியாசரின் அருளால், மிகவும் ரகசியமான, மிகவும் புனிதமான இந்த யோக அறிவை யோகேஸ்வரனான கிருஷ்ணனிடமிருந்து அவரே கூறக் கேட்டேன்.

76. ஓ, அரசரே! கேசவனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த இந்த  அற்புதமான புனிதமான உரையாடலை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்.

77. ஓ, பேரரசரே! ஹரியின் இந்த அற்புதமான வடிவத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து நான் வியப்பு வசப்பட்டு மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்.

78. எங்கே யோகங்களுக்கு ஈஸ்வரனான கிருஷ்ணரும், எங்கே பெரும்  வில்லாளியான அர்ஜுனனும் இருக்கிறார்களோ, அங்கே வளமும், வெற்றியும், சக்தியும், தர்ம்மும் இருக்கும். இது என் உறுதியான நம்பிக்கை.

(பகவத் கீதை நிறைவடைந்தது)

Wednesday, February 3, 2021

18. 17ஆவது அத்தியாயம் - மூன்று வகை நம்பிக்கைகள்

1. அர்ஜுனன் கூறினான்:
கிருஷ்ணா! சாஸ்திரங்களை மீறி நடந்து கொண்டாலும், நம்பிக்கையுடன் யாகங்களைச் செய்பவர்களின் நிலை என்ன? அவர்கள் நம்பிக்கை எப்படிப்பட்டது - சத்வ, ரஜோ, தமோ குணங்களில் எவ்வகையைச் சேர்ந்தது?

2. பகவான் கூறினார்:
உயிர்களின் நம்பிக்கை அவர்கள் இயல்புக்கேற்ப மூன்று வகையானது - சத்வம், ரஜஸ், தமஸ். இவை பற்றி நான் கூறுவதைக் கேள்.

3. பரத வம்சத்தவனே! ஒருவனின் நம்பிக்கை அவனது தன்மையைப் பொருத்துத்ததான், அமைகிறது. ஒரு மனிதன் அவனுடைய நம்பிக்கையின் வடிவமாக இருக்கிறான். ஒருவனுடைய நம்பிக்கை எப்படியோ அவன் அப்படி.

4. சத்வ குணம் உள்ளவர்கள் தெய்வங்களை வணங்குகிறார்கள். ரஜோ குணம் உள்ளவர்கள் யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும் வணங்குகிறார்கள். தமோ குணம் உள்ளவர்கள் இறந்தவர்களின் ஆவிகளையும் பேய்களையும் வணங்குகிறார்கள்.

5-6. சாஸ்திரங்களால் விதிக்கப்படாத கடுமையான நியமங்களைக் கடைப்பிடிப்பவர்கள் போலித்தன்மை, அகங்காரம் இவற்றின் பிடியில் இருந்து கொண்டு, காமத்தாலும், பற்றுக்களாலும் உந்தப்பட்டு, சிந்தனையின்றி உடலின் எல்லாக் கூறுகளையும், உடலில் இருக்கும் என்னையும் கூடத் துன்புறுத்திக் கொண்டிருப்பவர்கள் அசுர இயல்பு கொண்டவர்கள் என்று அறிந்து கொள். 

7. இனியவனே! அனைவருக்கான உணவிலும் மூன்று வகைகள் இருக்கின்றன. யாகங்கள், தவங்கள், தானங்கள் ஆகியவையும் அவ்வாறே. அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கேள்.

8. ஆயுள், தூய்மை, பலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, திருப்தி ஆகியவற்றை அதிகரிக்கும் சாறுள்ள, கொழுப்புச்சத்து மிகுந்த, ஊட்டமளிக்கக் கூடிய மனதுக்கு இதமளிக்கும் உணவையே சாத்வீக குணம் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.

9. கசப்பு, புளிப்பு, உப்பு இவை மிகுதியாக உள்ள, வெப்பமளிக்கும், காரமான, வாசனைப் பொருட்கள் அதிகம் கொண்ட, உலர்ந்த, எரிச்சல் தன்மை உள்ள, வருத்தம், துன்பம்,நோய் ஆகியவற்றை விளைவிக்கும் உணவுகளை ரஜோ குணம் மிகுந்தவர்கள் விரும்புவர்.

10.  பழைய, சுவையற்ற, கெட்டுப்போன, துர்நாற்றம் மிகுந்த, வீணான, பிறர் உண்டு மிச்சம் வைத்த உணவுகளைத் தமோ குணம் உள்ளவர்கள் விரும்புவர். 

11. சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி, ஈடுபாட்டுடன், பலனை விரும்பாமல் செய்யப்படும் யாகம் சத்வ இயல்புடையது.

12. பரதகுலத் திலகனே! பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்துக்காகவும் செய்யப்படும் யாகம் ரஜோ இயல்புடையதாகக் கருதப்படுகிறது என்று அறிந்து கொள்.

13. சாஸ்திர விதிகளுக்கு முரணாகவும், உணவு விநியோகிக்கப்படாமலும், மந்திரங்கள் சரியாகச் சொல்லப்படாமலும், புரோகிதர்களுக்கான காணிக்கை வழங்கப்படாமலும், ஈடுபாடின்றியும் செய்யப்படும் யாகம் தமோ இயல்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. 

14. தெய்வங்கள், ஆசிரியர்கள், குருமார்கள், ஆசிரியர்கள், அறிவில் சிறந்தவர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியம், அஹிம்சை - இவை இந்த உடலுக்கான தவங்கள் ஆகும்.

15. ஆவேசமற்ற (மற்றவர்களின் உணர்வுகளைத் தூண்டாத), உண்மையான, இனிமையான, பயனுள்ள பேச்சு, வேதங்களை முறையாக ஓதுதல் ஆகியவை பேச்சுக்கான தவங்கள் ஆகும். 

16. மனத்திருப்தி, மென்மையான தன்மை, மௌனம், சுயக்கட்டுப்பாடு, சிந்தனைத் தூய்மை இவை மனத்துக்கான தவங்கள் ஆகும்.

17. இந்த மூன்று வகைத் தவங்களும் தங்கள் செயல்களுக்கான பலன்களில் விருப்பம் இல்லாதவர்களால் ஈடுபாட்டுடன் செய்யப்படும்போது, அவை சாத்விகம் என்று அழைக்கப்படுகின்றன..

18. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், புகழுக்காகவும், பகட்டுக்காகவும் மேற்கொள்ளப்படும் தவங்கள் நிலையற்றவை, ஒருமித்த சிந்தனயின்றிச் செய்யப்படுபவை. இவை ராஜஸம் என்று கருதப்படுகின்றன.

19. அறியாமையின் அடிப்படையிலான புரிதல், தன்னை வருத்திக் கொள்ளுதல், மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கம் இவற்றுடன் செய்யப்படும் தவம் தாமஸ இயல்பு கொண்டது.

20. தகுதியுள்ள நபருக்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில், தகுதியுள்ள வகையில் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றிக் கொடுக்கப்படும் தானம் சாத்விகமானது என்று கருதப்படும்.

21. பதிலுக்கு ஒரு  நன்மையை எதிர்பார்த்தோ, ஒரு பலனை எதிர்பார்த்தோ, அரை மனத்துடனோ கொடுக்கப்படும் தானம் ராஜஸமானது என்று கருதப்படும்.

22. இடம், பொருள் இவற்றைக் கருதாமல், தகுதியற்ற நபர்களுக்கு, முறையான மரியாதைகள் இன்றி, முறையான புரிதல் இன்றிக் கொடுக்கப்படும் தானம் தாமஸ இயல்புடையது என்று கருதப்படும்.

23. ஓம் தத் சத் - கடந்த காலத்தில் வேதங்களைக் கற்கும்போதும், யாகங்களைச் செய்யும்போதும், பிரம்மம் இவ்வாறுதான் மூன்று விதமாக அந்தணர்களால் குறிப்பிடப்பட்டது.

24. எனவே பிரம்மத்தைப் பின்பற்றுபவர்கள் தங்கள், யாகங்கள், தர்மங்கள், தவங்கள், நியமங்கள் ஆகியவற்றை சாஸ்திரங்களில் குறிப்பிட்டபடி எப்போதும் ஓம் என்றுதான் துவங்குகிறார்கள்.

25. இவ்வாறு தங்கள் செயல்களுக்குப் பலன்களை எதிர்பார்க்காமல் முக்தியை விரும்பிச் செய்யப்படும் தங்கள் யாகங்கள், தவங்கள், தர்மங்கள் மற்றும் பல நியமங்கள் ஆகியவற்றை அவர்கள் 'தத்' என்று சொல்லிச் செய்கிறார்கள்.

26. 'சத்' என்ற சொல் நிலையான உண்மையையும், இந்த நிலையான  உண்மையை உணர்ந்து அதைப் பின்பற்றுபவரையும் குறிக்கும். ஓ, பார்த்தா! 'சத்'  என்ற சொல் இந்த நிலையான உண்மையை உணர்ந்த செயல்களையும் குறிக்கும்.

27. 'சத்' யாகம், தவம், தானம் இவற்றில் நிலைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. நிலையான உண்மைக்காகச் செய்யப்படும் செயலும் 'சத்' என்று குறிப்பிடப்படுகிறது.

28. ஓ, பார்த்தா! ஆயினும், ஈடுபாடு இல்லாமல் செய்யப்படும் யாகம், கொடுக்கப்படும் தானம், பின்பற்றப்படும் தவம் ஆகியவை இவ்வுலகிலும், இறப்புக்குப் பின் வரும் உலகிலும் சரி 'அசத்' (பொய்யானது') என்று கருதப்படும்.

அத்தியாயம் 18

Saturday, January 23, 2021

17. 16 ஆவது அத்தியாயம் - தேவ, அசுர குணங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்

 1-3. பகவான் கூறினார்:

பரத வம்சத்தவனே! அச்சமின்மை, மனத்தூய்மை, ஞானம் பெறுவதில் யோக நிலையிலான ஈடுபாடு, கொடை, சுயக்கட்டுப்பாடு, யாகம் போன்ற சடங்குகள், வழிபாடு, வேத நூல்களைப் படித்தல் ஆகியவற்றில் ஈடுபாடு, தவம், எளிமை, அகிம்சை, உண்மை, கோபமின்மை, தியாக மனப்பான்மை, மன அமைதி, குற்றம் கூறாமை, எல்லா உயிர்களிடமும் கருணை, பேராசைப்படாமை, மென்மை, அடக்கம், மன உறுதி, ஒளி விடல், அறிவுக் கூர்மை, மன்னிக்கும் இயல்பு, மன வலிமை, தூய்மை, பொறாமையின்மை, ஆணவமின்மை ஆகியவை தேவ இயல்போடு பிறந்தவர்களின் தன்மைகள்.

4. பார்த்தா! போலித்தனம், தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளுதல், கர்வம், கோபம், பணிவின்மை, அறியாமை ஆகியவை அசுர இயல்போடு பிறந்தவர்களின் குணங்கள்.

5. தேவ குணங்கள் விடுதலைக்கானவை என்றும், அசுர குணங்கள் பிணையை ஏற்படுத்தும் வகையானவை என்றும் கருதப்படுகிறது.. பாண்டவனே, கவலைப்படாதே! நீ தேவகுணங்களோடு பிறந்தவன்.

6. தேவ குணம் கொண்டவர்கள், அசுர குணம் கொண்டவர்கள் என்று இரண்டு வகை மனிதர்கள் இந்த உலகில் படைக்கப்படுகிறார்கள். தேவ குணங்களைப் பற்றி நான் விரிவாகச் சொல்லி விட்டேன், பார்த்தா! இப்போது அசுர குணங்கள் பற்றி நான் கூறுவதைக் கேள்.

7. அசுர இயல்பு உள்ளவர்களால் எது சரியான செயல், எது முறையற்ற செயல் என்று அறிய முடியாது. அவர்களிடம் தூய்மையோ, முறையான நடத்தையோ, உண்மையோ இருக்காது.

8. இந்த உலகம் பொய்யென்றும், (தர்மம் என்ற) அடிப்படை இல்லாதது என்றும், கடவுளைக் கொண்டு அமையாதது என்றும், கூடலால் மட்டுமே உருவானது என்றும், காமத்தைத் தவிர வேறு காரணம் இல்லாதது என்றும் அவர்கள் கூறுவர்.

9. இந்தக் கருத்தைக் கொண்டவர்களாக, தங்கள் ஆத்மாவை இழந்த, குறைந்த அறிவு பெற்ற இவர்கள் இந்த உலகத்தை அழிப்பதற்கான பயனற்ற, கொடிய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

10. எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தியை ஏற்படுத்தாத ஆசைகள், போலி கௌரவம், ஆணவம், திமிர், மாயை இவற்றினால் பீடிக்கப்பட்டு, நிலையற்ற விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் தூய்மையற்ற நோக்கங்களுடன் செயலாற்றுகிறார்கள்.

11. எண்ணிலடங்காத கவலைகளிலும் பயங்களிலும் இறக்கும் வரையில் சிறைப்பட்டு, அசுர இயல்பு உடையவர்கள் புலன் இன்பங்களை அனுபவிப்பதையே உயர்ந்த நோக்கமாகக் கருதுகிறார்கள்.

12. நூற்றுக்கணக்கான ஆசாபாசங்களால் பிணைக்கப்பட்டு, ஆசை மற்றும் கோபத்தால் இயக்கப்பட்டுப் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக அவர்கள் தவறான வழிகளில் பொருள் ஈட்டுகிறார்கள்.

13. "இன்று என்னால் இது பெறப்பட்டது. நான் விரும்பும் இதை நான் அடைவேன். இது என்னுடையது. எதிர்காலத்தில் நான் மீண்டும் செல்வம் பெறுவேன்.

14. "என்னுடைய இந்த எதிரியை நான் வீழ்த்தி விட்டேன். மற்றவர்களையும் நான் வீழ்த்துவேன். நானே எஜமானன். நானே அனுபவிப்பவன். நான் சிறந்தவன், சக்தி வாய்ந்தவன், மகிழ்ச்சியாக இருப்பவன்.

15. "நான் செல்வந்தன், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு நிகரானவன் யார்? நான் யாகம் செய்வேன், தர்மம் செய்வேன், சுகமாக இருப்பேன்" -  அசுர இயல்பு உள்ளவன் அறியாமையினால் இவ்வாறு தவறாகச் சிந்திப்பான்.

16. பல்வகைக் கவலைகளாலும் பயங்களாலும் பீடிக்கப்பட்டு, மாயையின் வலையில் வீழ்ந்து, ஆசைப்படுபவற்றை அனுபவிப்பதில் ஆழ்ந்து கீழான நரகத்தில் அவர்கள் வீழ்கிறார்கள்.

17. தன்னைப் பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டு, ஆணவத்துடன், செலவத்தினால் செருக்கும், வெறியும் கொண்டு, நியமங்களைப் பின்பற்றாமல் அவர்கள் ஆடம்பரத்துக்காகப் பெயரளவில் யாகங்களைச் செய்கிறார்கள்.  

18. அகங்காரம், சக்தி, ஆணவம், ஆசை, கோபம் ஆகியவற்றால் ஆளப்பட்டு, அசுர இயல்பு கொண்டவர்கள் தங்கள் உடலிலும், மற்ற உடல்களிலும் இருக்கும் என் மீது வெறுப்பு கொண்டு என்னை நிந்திக்கிறார்கள்.

19. வெறுப்பணர்வு கொண்ட இந்தக் கொடூரமான, உலகின் மிகக் கீழான மனிதர்களை நான் மீண்டும் மீண்டும் துன்பத்தைத் தரும் அசுரக் கருப்பைகளுக்குள் தள்ளுகிறேன்.

20. குந்தியின் மகனே! அசுரக் கருக்களை அடைந்து,  இந்த மூடர்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை அடைய முடியாமல் கீழான நரகத்தை அடைகிறார்கள்.

21. ஆத்மாவுக்குத் தீங்கான இந்த நரகங்களுக்கு மூன்று வாசல்கள் உண்டு - காமம், கோபம், ஆசை.எனவே இந்த மூன்றையும் ஒருவன் கைவிட வேண்டும்.

22. குந்தியின் மைந்தனே! இருளுக்கு இட்டுச் செல்லும் இந்த மூன்று வாசல்களிலிருந்தும் விடுபட்டவன் ஆத்மாவுக்கு நன்மையளிக்கும் செயல்களைச் செய்து உயர்ந்த நிலையை அடைகிறான்.

23. சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டதைக் கைவிட்டு, ஆசையினால் உந்தப்படும் செயல்களைப் புரிபவன் சித்தியையோ (நிறைவு) மகிழ்ச்சியையோ உயர்ந்த கதியையோ அடைவதில்லை.

24. எனவே, செயத்தக்கவை எவை, செயத்தகாதவை எவை எனபதைத் தீர்மானிப்பதில் சாஸ்திரங்கள் உனக்கு வழிகாட்டியாக இருக்கட்டும். சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவற்றை முறையாக  அறிந்து கொண்டு நீ உன் செயல்களைப் புரிய வேண்டும்.

அத்தியாயம் 17 - மூன்று வகை நம்பிக்கைகள்



Friday, January 15, 2021

16. 15ஆவது அத்தியாயம் - புருஷோத்தம யோகம்

 1. பகவான் கூறினார்:

பூமிக்குக் கீழே கிளைகளும். பூமிக்கு மேல் வேர்களும் கொண்டு இந்த ஆல மரம் முடிவற்றதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேத மந்திரங்களே அதன் வேர்கள். அதை அறிந்த ஒருவன் வேதத்தை அறிந்தவனாகிறான்.

2. அதன் கிளைகள் கீழேயும், மேலேயும் விரிகின்றன. அது குணங்களால் ஊட்டமளிக்கப் படுகிறது. புலன்களால் உணரப்படும் பொருட்களே அதன் மொட்டுக்கள். அதன் வேர்கள் கீழே விரிந்து மனிதர்களின் உலகில் செயல்களை உருவாக்குகின்றன.

3, 4. அந்த மரத்தின் வடிவத்தையோ, அதன் துவக்கத்தையோ, முடிவையோ, அதன் வேர்கள் எங்கிருந்து வருகின்றன என்பதையோ இந்த உலகத்தில் காண முடியாது. அந்த ஆலமரத்தின் வலுவான வேர்களைப் பற்றற்ற தன்மை என்ற ஆயுதத்தின் மூலம் வெட்ட வேண்டும். அதற்குப் பிறகு துவக்கமற்ற காலத்திலிருந்து இந்த முடிவற்ற செயல் யாரிடம் துவங்கி நிலை பெறுகிறதோ அந்தப் பழமையான, ஆதியான, உயர்ந்த புருஷனிடம் சரணடைந்து திரும்பி வர முடியாத அந்த இடத்துக்குச் செல்ல விழைய வேண்டும்.

5.அகங்காரம், மாயை இவற்றிலிருந்து விடுபட்டு, பற்று என்னும் குற்றத்திலிருந்து நீங்கி, ஆதியான பிரம்மத்தை எப்போதும் நினைத்து, காமத்திலிருந்து விலகி, இன்பம் துன்பம் என்ற இரட்டை நிலைகளிலிருந்து விடுபட்டு நிற்கும் அறிவுள்ளவன் அந்த முடிவற்ற நிலையை அடைகிறான்.

6. அங்கே சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளி விடுவதில்லை. அங்கே சென்றவர்கள் திரும்பி வருவதில்லை. அதுதான் என் இருப்பிடம்.

7. உயிர்கள் வாழும் இவ்வுலகில் உயிராக இருப்பது என்றும் நிலையாக இருக்கும் என் அம்சம்தான். அது மனம் உள்ளிட்ட ஆறு புலன்களையும் கொண்டு பிரகிருதியில் (உடலில்) நிலை கொண்டு கஷ்டப்படுகிறது. 

8. ஆத்மா உடலுக்குள் நுழையும்போதும், உடலை விட்டு நீங்கும்போதும், காற்று ஒரு நறுமணத்தை அது இருக்கும் இடத்திலிருந்து எடுத்துச் செல்வது போல் ஆத்மா ஆறு புலன்களையும் எடுத்துச் செல்கிறது.

9. கேள்வி, பார்வை, தொடு உணர்வு, சுவை, மணம், மனம் இவற்றில் இருந்து கொண்டு, ஆத்மா புலனின்பங்களை அளிக்கும் பொருட்களை அனுபவிக்கிறது.

10. தெளிவு பெறாமல், குணங்களின் ஆதிக்கத்தில் இருப்பவர்களால் ஆத்மா உடலை விட்டுச் செல்வதையோ, உடலில் இருப்பதையோ, புலன்கள் மூலம் அனுபவிப்பதையோ பார்க்க முடியாது. ஆனால் ஞானக் கண்கள் கொண்டவர்களால் இவற்றைப் பார்க்க முடியும்.

11. கடுமையான முயற்சி செய்யும் யோகிகளாலும் உடலுக்குள் இருக்கும் அந்த ஆத்மாவைப் பார்க்க முடியும். ஆனால் ஆத்ம ஞானம் பெறாத, சிந்தனைப் தெளிவற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதைப் பார்க்க முடியாது.

12. சூரியனிலிருந்து வந்து இந்த உலகம் முழுவதற்கும் ஒளியூட்டும் பிரகாசம், சந்திரனிலும், நெருப்பிலும் இருக்கும் ஒளி இவை என்னுடையவை என்று அறிவாயாக.

13. பூமிக்குள் பரவி எல்லா அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் என்னுடைய சக்தியால் நான் தாங்கிக் காக்கிறேன். சோமம் என்ற உயிர்ச் சத்தாகி எல்லாத் தாவரங்களுக்கும் நான் ஊட்டமளிக்கிறேன். 

14. ஜீரண சக்தியாக நான் எல்லா உடல்களிலும் இருந்து கொண்டு உள் வரும்  மற்றும் வெளியேறும் மூச்சுக் காற்றின் மூலம் நான்கு வகை உணவுகளையும் ஜீரணிக்கப்படச் செய்கிறேன்.

15. நான் எல்லோர் இதயத்திலும் இருக்கிறேன். ஞாபகம், அறிந்து கொள்ளுதல், அறியாமை ஆகியவை என்னிடமிருந்துதான் வருகின்றன. வேதங்களிலிருந்து அறிந்து கொள்ளப்பட வேண்டியன் நான்தான். வேதங்களை இயற்றியவன் நான், வேதங்களை அறிந்தவனும் நான்தான்.

16. இவ்வுலகில் இரண்டு விதமான புருஷர்கள் (உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள்) இருக்கிறார்கள் -  அழிவுள்ளவை, அழிவற்றவை. எல்லாப் பொருட்களும், உயிர்களும் அழியக் கூடியவை, ஆனால் உள்ளிருக்கும் ஆத்மா அழிவற்றது.

17. ஆனால் உயர்ந்தவரான இன்னொருவர்தான் உத்தம (முதன்மையான) புருஷன் என்று சொல்லப்படுகிறார். அவர் மூன்று உலகங்களிலும் பரவி அவற்றைக் காத்து நிற்கும் முடிவற்ற ஈஸ்வரன்.

18. அழிபவை, அழியாதவை இரண்டையும் நான் கடந்து நிற்பதால் இந்த உலகத்தாலும், வேதங்களாலும் நான் புருஷோத்தமன் என்று கொண்டாடப் படுகிறேன்.

19. பரத வம்சத்தவனே! மாயை இல்லாமல் இந்த விதமாக என்னைப் புருஷோத்தமன் என்று அறிந்து கொள்பவன் எல்லா விதங்களிலும் என்னிடம் முழுமையாக பக்தி செலுத்துவான்.

20. பாவங்களற்றவனே! இவ்விதமாக சாஸ்திரங்களில் இந்த உயர்ந்த ரகசியம் என்னால் இப்போது கூறப்பட்டது. பரத வம்சத்தவனே! இதை அறிந்து கொண்டவன் அறிவு பெற்றவனாகி அவனுடைய எல்லாச் செயல்களையும் சிறப்பாகச் செய்பவனாக ஆவான்.

அத்தியாயம் 16 - தேவ அசுர குணங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்



Friday, January 8, 2021

15. 14ஆவது அத்தியாயம் - மூன்று குணங்களுக்குமிடையிலான வேறுபாடுகள்

 1. பகவான் கூறினார்:
எல்லா ஞானங்களிலும் உயர்ந்த ஞானத்தை - எதை அறிந்ததன் மூலம் முனிவர்கள் இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு உயர்ந்த நிலையை அடைந்தார்களோ, அந்த ஞானத்தை - உனக்கு நான் மீண்டும் வழங்குகிறேன்.

2. இந்த ஞானத்தைச் சரணடைந்தவர்கள் என் தூய நிலையை அடைகிறார்கள். இந்த உலகம் உண்டாக்கப்படும்போது அவர்கள் பிறப்பதில்லை, பிரளயத்தின் போது (உலகம் அழியும்போது) அவர்கள் அழிவதும் இல்லை.

3. பரத வம்சத்தவனே! பிரம்மம் என்னும் என் கருப்பையில் நான் எல்லாப் பொருட்களையும் உருவாக்குகிறேன்.

4. எல்லா வகை உயிரினங்களின் கருப்பைகளிலும் உருவாகும், எந்த வடிவிலும் இருக்கும் எல்லாப் பிறவிகளும் பிரம்மம் என்ற அந்தப் பெரும் கருப்பையில் உருவானவைதான். அவற்றின் படைப்புக்குக் காரணமான தந்தை நானே.

5. தோள்வலி உடையவனே! சத்வம் (தூய்மை), ரஜஸ் (உணர்ச்சிகளால் உந்தப் படுதல்), தமஸ் (அறியாமை, சோம்பல்) ஆகிய மூன்று குணங்களும் பிரகிருதியிலிருந்து (உடலின் இயல்பிலிருந்து) தோன்றும் குணங்கள். இவை ஆத்மாவை உடலுடன் பிணைக்கின்றன.

6. பாவங்கள் அற்றவனே! அவற்றில் சத்வம் என்பது தூய்மையானது, ஒளி வழங்குவது, தீங்கற்றது. மகிழ்ச்சி, அறிவு இவற்றுடன் ஏற்படும் தொடர்பால், அது ஆத்மாவுக்குப் பிணைப்பை ஏற்படுத்திகிறது. 

7. குந்தி மைந்தனே! ரஜஸ் காமத்துக்கும், பந்தத்துக்கும் காரணமானது என்று அறிவாயாக. புலன்களால் துய்க்கப்படும் இன்பங்களின் மீதான ஆசையைத் தூண்டுவதன் மூலம் அது பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களுடனான பிணைப்பை (ஆத்மாவுக்கு) ஏற்படுத்துகிறது. 

8. பரத வம்சத்தவனே! தமஸ் அறியாமையால் விளைவது என்று அறிவாயாக. அது எல்லா உயிர்களிடத்திலும் மாயையை உருவாக்கி அலட்சியம், சோம்பல், தூக்கம் ஆகியவற்றின் மூலம் (ஆத்மாவுக்கு) பிணைப்பை ஏற்படுத்துகிறது

9. பரத வம்சத்தவனே! சத்வ குணம் நம்மை மகிழ்ச்சியுடன் பிணைக்கிறது, ரஜோ குணம் நம்மை (பலனை விரும்பிச் செய்யப்படும்) செயலுடன் பிணைக்கிறது, ஆனால் தமோ குணம் அறிவை மூடி மறைப்பதன் மூலம்  நம்மை அக்கறையின்மையுடன் பிணைக்கிறது.

10. பரத வம்சத்தவனே! ரஜோ, தமோ குணங்களை வென்று சத்வ குணம் நிலை பெறுகிறது. சத்வ, தமோ குணங்களை வென்று ரஜோ குணமும், சத்வ, ரஜோ குணங்களை வென்று தமோ குணம் நிலை பெறுகின்றன.

11. உடலின் எல்லாப் புலன்களின் மூலமும் ஞானம் வெளிப்படும்போது, சத்வ குணம் முதன்மை பெற்றிருப்பதாக அறிவாயாக.

12. பரதகுலத் தோன்றலே! பேராசை, செயல்களைச் செய்வதில் அதிக ஆர்வம், ஆசைகளை அடக்க முடியாத நிலை போன்றவை ரஜோ குணத்தின்  அடையாளங்கள்.

13. இருள் (அறியாமை), செயலற்ற தன்மை, அக்கறையின்மை, மாயை ஆகியவை தமோ குணம் மேலோங்கி இருக்கும்போது விளைகின்றன.  

14. மரணம் நிகழும்போது ஒருவன் சத்வ குணம் மிகுந்தவனாயிருந்தால், அவன் உயர்ந்த முனிவர்கள் வாழும் தூய உலகங்களை அடைவான்.

15. இறக்கும் தருவாயில் ரஜோ குணம் மிகுந்தவனாயிருந்தால் அவன் (பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும்) செயல்களில் ஆர்வம் மிகுந்தவர்களிடையே பிறப்பான். இறக்கும் சமயம் தமோ குணம் மிகுந்தவனாயிருந்தால் அவன் ஒரு மிருகத்தின் கருவில் பிறப்பான்.

16. சத்வ குணத்தில் செய்யப்பட்ட நற்செயல்கள் தூய்மையை விளைவிக்கும் என்றும், ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும் என்றும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் அறியாமையை விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

17. சத்வ குணத்திலிருந்து ஞானம் பிறக்கிறது, ரஜோ குணத்திலிருந்து, பேராசை பிறக்கிறது, தமோ குணத்திலிருந்து அறியாமையுடன் சேர்ந்த மாயையும், தவறான புரிதல்களும் பிறக்கின்றன.

18. சத்வ குணத்தில் நிலை பெற்றவர்கள் மேல் நோக்கி (சொர்க்கம் போன்ற உயர்ந்த உலகங்களுக்கு)ச் செல்கிறார்கள், ரஜோ குணத்தில் நிலை பெற்றவர்கள் நடுவில் (பூமி போன்ற உலகங்களில்) நிற்கிறார்கள், கீழ்மையான தமோ குணத்தில் நிலை பெற்றவர்கள் கீழ் நோக்கி (நரகம் போன்ற உலகங்களுக்கு)ச் செல்கிறார்கள்.

19. நம் செயல்பாடுகளில் இந்த மூன்று குணங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை ஒருவன் சரியாகப் புரிந்து கொள்ளும்போது அவன் குணங்களுக்கு மேலாக இருப்பது எது என்பதை அறிந்து என் இயல்பை அடைகிறான்.

20. இந்த உடலில் இருக்கும் ஆத்மா இந்த உடலின் செயல்களை இயக்கும் இந்த மூன்று குணங்களைக் கடந்து சென்றால், அது பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இறப்பற்ற தன்மையை அனுபவிக்கிறது. 

21. அர்ஜுனன் கூறினான்:
பிரபுவே! இந்த குணங்களைக் கடந்து செல்வதை எந்த அடையாளங்களால் அறிய முடியும்? இந்த மூன்று குணங்களைக் கடந்து செல்பவர்களின் நடத்தை எப்படி இருக்கும்? இந்த குணங்களைக் கடந்து செல்வது எப்படி?

22-25. பகவான் கூறினார்:
பாண்டவனே! ஒளி, செயல், மாயை இவை இருக்கும்போது அவற்றை வெறுக்காமலும், அவை இல்லாதபோது அவற்றுக்காக ஏங்காமலும், அவற்றில் அக்கறையின்றி இருந்து கொண்டு, குணங்கள் செயல்படுவதை உணர்ந்து, ஆனால் அவற்றினால் பாதிக்கப்படாமல், நிலையாகவும், சலனமின்றியும் இருந்து கொண்டு, மண், கல், தங்கம் இவற்றினால் இன்பமோ துன்பமோ உணராமல், விருப்பமானவை-விருப்பமற்றவை, இகழ்ச்சி-புகழ்ச்சி  இவற்றிடையே நிலையாக இருந்து கொண்டு, நண்பர்களையும், எதிரிகளையும் சமமாக பாவித்து, செயல் புரியும்போது தான் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவன் குணங்களைக் கடந்தவன் என்று கருதப்படுவான்.

26. திசை மாறாத பக்தியோகத்தின் மூலம் எனக்குச் சேவை புரிபவன் குணங்களைக் கடந்து சென்று பிரம்ம நிலையை அடையத் தகுதி பெறுகிறான். 

27. மரணமற்ற, மாறுபாடற்ற, நிரந்தரமான, தர்மமான, ஆனந்தமான, இறுதியான பிரம்மத்தின் இருப்பிடம் நானே.

அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்