Monday, October 26, 2020

9. எட்டாவது அத்தியாயம் - பிரம்மத்தை அடைதல்

1. அர்ஜுனன் கூறினான்:
புருஷோத்தமா! பிரம்மம் என்பது என்ன? ஆத்மா என்பது என்ன? பலன் தரும் செயல் (கர்மா) என்பது எது? எல்லாப் பொருட்களுக்கும் மூலம் என்பது என்ன? மூலதெய்வம் என்பது என்ன?

2. மதுசூதனா! யாகங்களுக்கெல்லாம் மூலமானவன் இந்த உடலுக்குள் எங்கே எவ்வாறு இருக்கிறான்? தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள் தங்கள் இறுதிப் பயணத்தின்போது உன்னை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

3. பகவான் கூறினார்:
பிரம்மம் என்பது அழிவற்றது, மிக உயர்ந்தது. தன்னை அறிந்திருப்பதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. இனப்பெருக்கம் செய்வதும், உலகில் உள்ளவர்களையும், உள்ளவற்றையும் பேணி வளர்ப்பதும் பாதுகாப்பதும்தான் செயல் (கர்மா) என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

4. மனிதர்களில் சிறந்தவனே! மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையவற்றின் மூலம் (ஆதிபூதம்) நான்தான். ஆத்மாதான் மூலதெய்வம் (ஆதி தெய்வம்). யாகங்களுக்கு மூலமாக உடலுக்குள் இருப்பவன் நான்தான் (ஆதியக்ஞம்).

5. தன் இறுதிக் காலத்தில் எவன் ஒருவன் என்னை நினைத்துக் கொண்டே இந்த உடலை விட்டு நீங்குகிறானோ, அவன் என்னுடைய இயல்பை அடைகிறான். இதில் எந்த வித ஐயமும் இல்லை.

6. குந்தியின் மைந்தனே! ஒருவன் தன் உடலை விட்டு நீங்கும்போது, எதைப் பற்றிச் சிந்திக்கிறானோ, அந்தச் சிந்தனையின் வடிவமாக ஆகிறான். 

7. எனவே அர்ஜுனா! நீ எப்போதும் என்னை நினைத்துக் கொண்டே போரில் ஈடுபடு. உன் அறிவையும் மனத்தையும் என்னிடம் அர்ப்பணித்தால் நீ ஐயமின்றி என்னை நிச்சயம் அடைவாய்.

8. பார்த்தா! யோகம் மற்றும் தியானம் மூலம், மனத்தை வேறெங்கும் அலைய விடாமல் உயர்ந்த பொருளான கடவுளை இடைவிடாமல் தியானிப்பவன் அவரை அடைவான். 

9. எல்லாம் அறிந்தவரும், மிகவும் பழமையானவரும், உலகை இயக்குபவரும், அணுவை விடத் துல்லியமானவரும், எல்லாவற்றையும் தாங்கி நிற்பவரும், அறிய முடியாத வடிவம் கொண்டவரும், சூரியனைப் போல் ஒளி கொண்டவரும், உலகப் பொருட்களைக் கடந்து நிற்பவருமான கடவுளை தியானிக்க வேண்டும்.

10. இறக்கும் தருவாயில், மனதை அலைய விடாமல், பக்தியுடன், பயிற்சியால் கிடைத்த யோகத்தின் சக்தியால் மூச்சுக் காற்றை இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்துபவன் ஒளி பொருந்திய அந்த பிரம்மத்தை அடைகிறான்.

11.  எது வேதங்களை அறிந்தவர்களால் அழிவற்றது என்று கூறப்பட்டிருக்கிறதோ, எது புலன்களக் கட்டுப்படுத்தித் தவம் செய்பவர்களால் அடையப்படுகிறதோ, எதை அடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அந்த (மேலான) உலகைப் பற்றி நான் உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன். 

12. உடலில் உள்ள எல்லா துவாரங்களையும் மூடி, மனத்தை இதயத்திலும், மூச்சுக் காற்றை தலையின் உச்சியிலும் நிலை நிறுத்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.

13. பிரம்மத்தைக் குறிக்கும் ஓம் என்ற ஒற்றையெழுத்தை உச்சரித்து, என்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் எவரும் இந்த உடலை விட்ட பின் உயர்ந்த நிலையான வீடு பேற்றை அடைவர்.

14. ஒ, பார்த்தா! வேறு எந்த நினைவுமின்றி என்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு யோகியால் என்னைச் சுலபமாக அடைய முடியும். 

15. என்னை அடைந்த பின் இந்த உயர்ந்த ஆத்மாக்கள் நிலையற்ற, வலி மிகுந்த இந்த உலகில் மீண்டும் பிறக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மிக உயர்ந்த நிலையை அடந்து விட்டார்கள்.

16. ஓ, அர்ஜுனா! பிரம்மலோகம் முதல் எல்லா உலகங்களில் இருப்பவர்களுக்கும் மறுபிறவி உண்டு. ஆனால், குந்திபுத்திரனே! என்னை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறப்பது என்பது இல்லை.

17. பிரம்மாவின் ஒரு பகல் ஆயிரம் யுகங்கள் கொண்டது, அதே கால அளவு கொண்டதுதான் அவருடைய ஒரு இரவும் என்பதை அறிந்தவர்கள் பகலையும், இரவையும் அறிந்தவர்கள்

18. பிரம்மாவின் பகல் துவங்கும்போது, வடிவற்ற நிலையிலிருந்து உயிர்கள் பிறக்கின்றன. பிரம்மாவின் இரவு துவங்கும்போது, அவை வடிவற்ற நிலைக்குள் அடங்குகின்றன.

19. இந்தக் கணக்கற்ற உயிரினங்கள் இந்தப் பகல் பிறந்ததும் மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள், இரவு வந்ததும் அழிந்து போய், பகல் வந்ததும் மீண்டும் பிறக்கிறார்கள்.

20. ஆயினும் எல்லா உயிர்களும் அழியும்போதும் அழியாத, என்றும் நிலைத்திருக்கும், தோற்றங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தோற்றமற்ற, உயர்ந்த சக்தி இருக்கிறது.

21. அது தோற்றமில்லாதது என்றும், அழிவற்றது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதுதான் அடைய வேண்டிய, அடைந்தபின் (பிறவிச் சுழற்சிக்கு) திரும்ப வராத இடம். அதுதான் என்னுடைய உயர்ந்த இடம்.

22. ஓ, பார்த்தா, தன்னை விட உயர்ந்ததாக எதுவும் இல்லாத அந்தப் பரமாத்மா எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறார். அவர் எல்லாவற்றுக்குள்ளும் ஊடுருவியிருக்கிறார். ஒருமுகப்படுத்திய பக்தியால்தான் அவரை அடைய முடியும்.

23. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இவ்வுலகை விட்டு நீங்கிய பிறகு யோகிகள் எப்போது திரும்ப வருவார்கள், எப்போது திரும்ப வர மாட்டார்கள் என்பதை நான் உனக்கு விளக்குகிறேன்.

24.  நெருப்பு, வெளிச்சம், பகல்வேளை, வளர்பிறை, உத்தராயணம் இவை இருக்கும்போது இந்த உலகை விட்டு நீங்கும் யோகிகள் நேரே பிரம்மத்தை அடைவார்கள்.

25. புகை, இரவுவேளை, தேய்பிறை, தக்ஷிணாயணம் இவை இருக்கும்போது இந்த உலகை விட்டு நீங்கும் யோகிகள் சந்திரனின் ஒளியை அடைந்து மீண்டும் பிறப்பார்கள்.  

26. ஒளி மற்றும் இருள் என்ற இந்த இரண்டு பாதைகள்தான் இவ்வுலகிலிருந்து செல்வதற்கு எப்போதுமே உள்ள வழிகள். முந்தைய பாதையில் செல்பவன் திரும்பி வர மாட்டான், பிந்தைய பாதையில் செல்பவன் திரும்ப வருவான்.

27. பார்த்தா! இந்த இரண்டு பாதைகளை அறிந்த எந்த ஒரு யோகியும் மதி மயங்க மாட்டான். எனவே, அர்ஜுனா, நீ எப்போதும் யோகப்பாதையிலேயே நிலைத்திரு.

28. இதை உணர்ந்த ஒரு யோகி வேதங்களைப் படிப்பதாலும், யாகங்களைச் செய்வதாலும், தவம், தானம் ஆகியவற்றால் கிடைக்கும் பலன்களுக்கும் மேலாக ஒரு உயர்ந்த நிலையை அடைகிறான்.

அத்தியாயம் 9


Friday, October 16, 2020

8. ஏழாவது அத்தியாயம் - ஞான யோகம்

1. பகவான் கூறினார்:
ஓ பார்த்தா! உன் மனத்தை என்னிடத்தில் செலுத்தி, யோகப்பயிற்சி செய்து, என்னைச் சரணடைந்து, எந்த ஒரு ஐயமும் இன்றி என்னை உன்னால் எப்படி முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்பதைக் கேள்.

2. இப்போது இந்த ஞானத்தையும் அதை முழுமையாக அடையும் விதத்தையும் உனக்கு விளக்குகிறேன். இதை அறிந்த பின், நீ அறிய வேண்டியது வேறு எதுவும் இருக்காது.

3. பல்லாயிரம் மனிதர்களில் ஒருவரே யோக நிலையை அடைய முயற்சி செய்கிறார். அதில் வெற்றி கண்டவர்களுக்குள்ளும் ஒருவரே என்னை உண்மையாக அறிகிறார். 

4. நிலம், நீர், தீ, காற்று, வெளி, மனம், ஆத்மா, அகங்காரம் இவை என் வெளிப்புற சக்தியின் எட்டு பிரிவுகளாகும். 

5. வலுவான கரங்களை உடையவனே, கீழ்நிலையில் உள்ள இந்த சக்தியைத் தவிர, உயர் நிலையில் இன்னொரு சக்தி உள்ளது என்பதை அறிவாயாக. அது இந்த உலகில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி வரும் உயிர்களைக் கொண்டது.

6. படைக்கப்பட்ட எல்லாமே என்னுடைய இந்த இரண்டு சக்திகளிலிருந்தும்தான் உருவானவை என்பதை அறிவாயாக. இந்த அண்டம் முழுவதையும் படைத்தவனும் நானே, அழிப்பவனும் நானே. 

7. ஓ, தனஞ்ஜயா! எனக்கு மேலாகவும், என்னை விட உயர்வானதாகவும் வேறொரு சக்தி இல்லை. இங்கே உள்ள அனைவரும்/ அனைத்தும் மாலையில் கோர்க்கப்பட்ட முத்துக்கள்போல் என்னுடன் பிணைந்துள்ளனர்.

8. குந்தி மைந்தனே! நீரின் சுவையாகவும், சூரிய சந்திரர்களின் ஒளியாகவும், எல்லா வேதங்களிலும் ஓம் என்ற பிரணவ மந்திரமாகவும், வெளியில் (ஆகாயத்தில்) ஒலியாகவும் மனிதனின் சக்தியாகவும் நான் இருக்கிறேன்.

9. பூமியின் இயல்பான மணமாகவும், தீயின் வெப்பமாகவும், எல்லா உயிரினங்களின் உயிராகவும், தவசிகளின் தவமாகவும் நான் இருக்கிறேன்.

10. அர்ஜுனா! நான் எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான வித்தாக இருக்கிறேன், அறிவுள்ளவர்களின் அறிவாக இருக்கிறேன், சக்தி உள்ளவர்களின் சக்தியாக இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்.

11. பரத வம்சத் தோன்றலே! நான் வலுவுள்ளவர்களின் வலுவாக இருக்கிறேன். ஆசைகளற்றவனாகவும் பற்றற்றவனாகவும் இருக்கிறேன். ஆனால் எல்லா உயிர்களுக்குள்ளும் தர்மத்துக்குப் புறம்பாக இல்லாத காம இச்சையாக இருக்கிறேன்.

12. சத்வ (தூய்மையான), ரஜோ (உணர்ச்சி மிகுந்த), தமோ (அறியாமையால் பீடிக்கப்பட்ட) குணங்களின் தன்மையில் அமைந்துள்ள எல்லாமே என்னிடமிருந்து உருவானவைதான் என்பதை அறிந்து கொள். அவை என்னுள் இருக்கின்றன, ஆனால் நான் அவற்றுள் இல்லை.

13. இந்த மூன்று குணங்களின் மாயையில் ஆழ்ந்திருக்கும் இந்த மொத்த உலகமும் இவற்றுக்கு அப்பால் இருக்கும், மாற்றத்துக்கு உட்படாத என்னை அறிய மாட்டா.

14. உண்மையில் இந்த குணங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்னுடைய இந்த தெய்வீக மாயையிலிருந்து மீள்வது கடினம். என்னைச் சரணடைந்தவர்களால் மட்டும்தான் இது இயலும்,

15. ஆனால் தீமை புரிபவர்களும், மூடர்களும், கீழ்த்தரமான மனிதர்களும் என்னைச் சரணடைய மாட்டார்கள். மாயையால் தங்கள் அறிவு கவரப்பட்டவர்களாக இவர்கள் அசுரத் தன்மையை மேற்கொள்வார்கள்.

16. பரத வம்சத்தில் பிறந்தவர்களுக்குள் சிறந்தவனே! நான்கு வகை பக்தர்கள் என்னை வணங்குகிறார்கள். துன்பத்தில் இருப்பவர்கள், ஞானத்தைத் தேடுபவர்கள், செல்வத்தை விரும்புபவர்கள், ஞானிகள்.

17. இவர்களுக்குள் எப்போதும் பக்தியில் மட்டுமே ஈடுபட்டிருக்கும் ஞானிகள் சிறப்பு வாய்ந்தவர்கள். ஏனெனில் நான் அவர்களிடம் அதிக அன்பு வைத்திருக்கிறேன், அவர்களும் என்னிடம் அதிக அன்பு வைத்திருக்கிறார்கள்.

18. இவர்கள் அனைவருமே உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்தான். ஆயினும் என்னை அறிந்தவனை என்னைப் போன்றவனாகவே நான் கருதுகிறேன்.  ஏனெனில் அடைய வேண்டிய உயர்ந்த பொருள் நான் என்று உணர்ந்து அவன் என்னிடம் பக்தி செய்கிறான்.

19. பல பிறவிகளுக்குப் பிறகுதான் வாசுதேவன்தான் எல்லாம் என்று புரிந்து கொண்டு ஞானி என்னைச் சரணடைகிறான். ஆனால் அத்தகைய மகாத்மாக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவார்கள்.

20. உலகப் பொருட்களின் மீது ஆசை கொண்டதால் தங்கள் அறிவு திசை மாற்றப்பட்டவர்கள் அவர்கள் இயல்புக்கேற்றபடி சடங்குகள், நியமங்கள் மூலம் பிற தெய்வங்களை வழிபடுகிறார்கள்.

21. ஒரு பக்தன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இறைவனை எந்த வடிவத்தில் வழிபட விரும்பினாலும் அந்த வடிவத்தில் அவனுடைய நம்பிக்கையை நான் உறுதியாக்குகிறேன்.

22. அந்த பக்தியின் பயனாக அவன் தான் வணங்கும் தேவதையிடம் தான் விரும்பிய பலன்பளைக் கேட்டுப் பெறுகிறான். ஆயினும் அவை என்னால் வழங்கப்பட்டவையே.

23. அத்தகைய குறைந்த அறிவுடையவர்கள் குறைவான தற்காலிகமான பலன்களையே பெறுகிறார்கள். குட்டி தேவதைகளை வணங்குபவர்கள் அந்தக் குட்டி தேவதைகளின் இருப்பிடத்துக்குச் செல்கிறார்கள். என்னை வணங்குபவர்கள் என்னை வந்து அடைகிறார்கள்.

24. என் அழிவற்ற, உயர்ந்த தன்மையை அறியாதவர்கள் என்னை நான் எடுத்துக் கொண்டுள்ள வடிவமாகவே அறிகிறார்கள்.

25. யோக மாயையால் நான் மறைக்கப்பட்டிருப்பதால் என்னை எல்லோராலும் அறிய முடியாது. பிறப்போ, அழிவோ இல்லாத என்னை அறிவற்றவர்களால் அறிந்து கொள்ள முடியாது. 

26. ஓ, அர்ஜுனா! கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் நான் அறிவேன். எல்லா உயிர்களையும் நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறிய மாட்டார்கள்.

27. எதிரிகளை வெல்பவனே! பரத வம்சத்தவனே! விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு தன்மைகள் உருவாக்கும் மாயையால் எல்லா உயிர்களும் பிறக்கும்போதிலிருந்தே அறியாமையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.  

28. ஆனால் நற்செயல்களைச் செய்து தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்றவர்கள் (விருப்பு வெறுப்பு என்ற) எதிரெதிரான இரண்டு குணங்களின் மாயையீலிருந்து விடுபட்டு என்னை எப்போதும் வணங்கி வருவார்கள்.

29. என்னைச் சரண்டைவதன் மூலம் முதுமை மற்றும் மரணத்திலிருந்து விடுதலை பெற விரும்புபவர்கள் பிரம்மத்தையும், ஆத்மாவைப் பற்றிய முழு அறிவையும், செயல்கள் பற்றியும் அறிகிறார்கள்.

30. என்னை எல்லாப் பொருட்களுக்கும் மூலம் என்றும் மூல தெய்வமென்றும், யாகங்களுக்கெல்லாம் அடிப்படை என்றும் அறிந்து கொள்பவர்கள் என்னை உறுதியாக நினைப்பதன் மூலம், இறக்கும் தருவாயிலும் என்னை அறிவார்கள்.

அத்தியாயம் 8





 

Tuesday, October 6, 2020

7. ஆறாவது அத்தியாயம் - தியான யோகம்

பகவான் கூறினார்:
1. நிர்ணயிக்கப்பட்ட கடமைகளை, பலனை எதிர்பார்க்காமல் செய்பவன்தான் உண்மையான துறவி மற்றும் யோகி, நெருப்பைப் பயன்படுத்தாமல் இருப்பவனோ, செயல் புரியாமல் இருப்பவனோ அல்ல.

2. பாண்டுவின் புதல்வனே! தன்னை பிரம்மத்துடன் இணைத்துக் கொள்ளும் யோகம்தான் துறத்தல் என்று போற்றப்படுகிறது என்று அறிவாயாக. செயல்களுக்கான பலன்களைத் துறக்காமல் ஒருவன் யோகி ஆக முடியாது.

3. தன்னை பிரம்மத்துடன் இணைக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ள துறவிக்கு செயல்தான் வழி என்று கூறப்பட்டுள்ளது. தன்னை பிரம்மத்துடன் இணைப்பதில் முழுமை பெற்று விட்டவனுக்கு செயல் புரியாமல் இருப்பதுதான் வழி என்று கூறப்பட்டிருக்கிறது.

4. ஒருவன் எல்லா ஆசைகளையும் துறந்து, புலன்களைத் திருப்தி செய்வதற்காகவோ அல்லது பலன்களுக்காகவோ செயல் புரியாதபோதுதான், அவன் யோகத்தில் நிலை பெற்றதாகக் கருதப்படுகிறான்.

5. ஒருவன் தன்னைத் தன் ஆத்மாவினாலேயே உயர்த்திக் கொள்ள வேண்டும், தன்னையே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஒருவனுக்கு நண்பனாக இருப்பது அவன் ஆத்மா, எதிரியாக இருப்பதும் அவன் ஆத்மாதான்.

6. தன் ஆத்மாவின் துணையுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட ஒருவனுக்கு அவன் ஆத்மாதான் சிறந்த நண்பன். ஆனால் தன்னை வெற்றி கொள்ளாத ஒருவனுக்கு அவன் ஆத்மா எதிரியாகத்தான் இருக்கும்.

7. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட மனிதன் குளிர்-வெப்பம், மகிழ்ச்சி-துயரம், மதிப்பு-இகழ்ச்சி ஆகிய இரட்டை நிலைகளைக் கடந்து பிரம்மத்தில் நிலை பெற்றவனாக இருக்கிறான்.

8. கல்வி அறிவினாலும், ஆத்ம ஞானத்தாலும் திருப்தி அடைந்தவன் புலன்களை வென்றவனாக பிரம்மத்தில் நிலைக்கிறான். அவன் தங்கம், மண், கல் அனைத்தையும் ஒன்றாகக் கருதுவான்.

9. தன் நலனை விரும்புபவர்கள், தன்னிடம் அன்பு காட்டி ஆதரிப்பவர்கள், நடுநிலையில் இருப்பவர்கள், மத்தியஸ்தம் செய்பவர்கள், விரோதிகள், நண்பர்கள், பொறாமை கொண்டவர்கள், பாவம் செய்தவர்கள், முனிவர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றாக நினைப்பவன் இன்னும் மேம்பட்ட நிலையை அடைந்தவன்.

10. யோகநிலையை அடைய விரும்புபவன் ஒரு தனிமையான இடத்தில் தனியாக இருந்தபடி உடல், மனம், ஆத்மா அனைத்தையும் பிரம்மத்தில் நிலைபெறச் செய்து ஆசைகளிலிருந்தும், எதுவும் தனக்குச் சொந்தம் என்ற எண்ணத்திலிருந்தும் விடுபட்டவனாக இருக்க வேண்டும்.

11, 12. அதிக உயரத்திலோ, அதிகக் கீழாகவோ இல்லாத ஒரு இடத்தில் தர்ப்பைப் புல், மான் தோல் அல்லது துணியின் மீது அமர்ந்து மனம், புலன்கள், செயல்கள் இவற்றைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தித் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக தியானம் செய்ய வேண்டும்.

13. உடல், நெற்றி, கழுத்து இவற்றை ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு வைத்துக் கொண்டு, உடல்  அசையாமல், மனத்தை வேறு எங்கும் அலைய விடாமல் மூக்கின் நுனியின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

14. அமைதியான மனத்துடன், அச்சம் இல்லாமல், பிரம்மச்சரிய விரதத்தில் உறுதியாக இருந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி, மனத்தைச் சமநிலையில் வைத்து என்னை மட்டுமே இலக்காகக் கருதி அமர்ந்திருக்க வேண்டும்.

15. இந்த வகையில் தொடர்ந்து உடல், மனம், செயல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மனத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, யோகி என்னுள் நிலை பெற்று முழு அமைதியை அடைகிறான்.

16. அர்ஜுனா! யோகம் என்பது அதிகம் உண்பவர்களுக்குக் கைவராது, மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் கைவராது. அது போல், அதிகம் தூங்குபவர்களுக்கோ, மிகவும் குறைவாகத் தூங்குபவர்களுக்கோ யோகம் சித்திக்காது.

17. உண்பதையும், சுகங்களை அனுபவிப்பதையும் கட்டுப்படுத்திக் கொண்டு, சமனமான நிலையில் செயல்பட்டு, விழித்துக் கொண்டிருப்பதற்கும், உறங்குவதற்கும் இடையே ஒரு சமன நிலையைக் கடைப்பிடிப்பவனுக்கு, யோகம் அவனுடைய எல்லாத் துயங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும். 

18. ஒருவன் யோகத்தைப் பயிற்சி செய்து மனத்தை ஆத்மாவில் நிலை பெற்றிருக்கச் செய்து, வெளிப் பொருட்களின் மீதான விருப்பங்களால் ஈர்க்கப்படாமல் இருந்தால் அவன் யோகத்தில் நிலை பெற்றவன் ஆகிறான்.

19. காற்று இல்லாத இடத்தில் தன் சுடர் ஆடாமல் இருக்கும் ஒரு விளக்கு தன் மனதைக் கட்டுப்படுத்தி, பிரம்மத்துடன் இணைந்திருக்கும் யோகிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.

20. யோகத்தினால் இவ்வாறு மனம் கட்டுப்படுத்தப்பட்டபோது ஆத்மா ஆத்மாவையே பார்த்து ஆத்மாவினாலேயே திருப்தி அடைகிறது.

21. அந்த நிலையில் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மாவை அறிவு உணர்ந்து, எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவித்து உண்மையிலிருந்து விலகாமல் இருக்கிறது.

22. அந்த நிலையில் ஒருவன் எல்லாம் கிடைத்து விட்டதை உணர்ந்து, இனி கிடைப்பதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து, கடுமையான துயரங்களால் கூட பாதிக்கப்படாமல் இருக்கிறான்.

23. துன்பத்திலிருந்து விடுபட்டிருக்கும் இந்த நிலைதான் யோகம் என்று அழைக்கப்படுகிறது. இது உறுதியுடனும், அலைபாயாத மனநிலையுடனும் பின்பற்றப்பட வேண்டும்.

24. தொடர் முயற்சி, அர்ப்பண உணர்வு, உறுதியான நம்பிக்கை இவற்றின் மூலம் யோக நிலையை எப்போதும் நிலை நிறுத்த வேண்டும். மனத்தில் எழும் புலன் இன்ப ஆசைகளை எல்லாப் புறங்களிலிருந்தும் மனத்தினாலேயே கட்டுப்படுத்தி விலக்க வேண்டும்.

25. அறிவு மற்றும் ஆழ்ந்த தியானம் மூலம் சிறிது சிறிதாக, படிப்படியாக தனக்குள்ளே கவனம் செலுத்தி, வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், மனதை முழுவதும் ஆத்மாவில் நிலை நிறுத்த வேண்டும்.

26.  மனம் வேறு எங்கோ செல்லும்போதெல்லாம், அதை உடனே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

27. இத்தகைய யோகி பிரம்மத்துடன் இணைந்தவனாக எல்லையற்ற ஆனந்தத்தை அடைகிறான். அவன் ஆசைகளிலிருந்து விடுபட்டு அமைதியுடனும், பாவத்திலிருந்து விடுபட்டும் இருக்கிறான்.

28. இவ்வாறு தொடர்ந்து யோகநிலையில் இருப்பவன் பாவங்களிலிருந்து விடுபட்டவனாக, பிரம்மத்துடன் இணைந்தவனாக எல்லையற்ற ஆனந்த்ததை அடைகிறான்.

29. உண்மையான யோகி எல்லாப் பொருட்களிலும் என்னைப் பார்க்கிறான், என்னிடம் எல்லாப் பொருட்களையும் பார்க்கிறான். உண்மையில் தன்னை அறிந்த ஒருவன் என்னை எங்கும் பார்க்கிறான்.

30. என்னை எல்லா இடங்களிலும் பார்ப்பவன், என்னில் எல்லாவற்றையும் பார்ப்பவன் என்னை விட்டு நீங்குவதில்லை, நானும் அவனை விட்டு நீங்குவதில்லை.

31. எல்லாப் பொருட்களுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா நானே என்பதை உணர்ந்து என்னை வணங்குபவன் எல்லாச் சூழல்களிலும் எனக்குள்ளேயே இருக்கிறான்.

32. ஓ, அர்ஜுனா! எவன் தன் ஆத்மாவுடன் ஒப்பிட்டு, மகிழ்ச்சியிலும், துயரத்திலும் எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கிறானோ, அவனே யோக நிலையில் மிக உயர்ந்தவன்.

33. அர்ஜுனன் கூறினான்:
ஓ, மதுசூதனா, மனத்தின் அலைபாயும் தன்மையையும், நிலையற்ற தன்மையையும் கருதும்போது, நீ குறிப்பிட்ட, சம நிலையில் பார்க்கும் யோகம் எனக்குப் புரியவில்லை.

34. ஓ, கிருஷ்ணா! உண்மையில், மனம் அலைபாயும் தன்மை உடையது, குழப்பம் மிகுந்தது, வலுவானது, மற்றும் கடினத்தன்மை கொண்டது. மனத்தைக் கட்டுப்படுத்துவது காற்றைக் கட்டுப்படுத்துவது போல் கடினமானது

35. பகவான் கூறினார்:
வலுவான கரங்களை உடையவனே! சந்தேகமில்லாமல், மனம் அலைபாயும் தன்மை கொண்டதுதான், கட்டுப்படுத்தக் கடினமானதுதான். ஆயினும், பயிற்சியாலும், பற்றற்ற நிலையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாலும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

36. மனம் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கும்போது யோகத்தைக் கடைப்பிடிப்பது இயலாத செயல். மனத்தைக் கட்டுப்படுத்தி சரியான வழியில் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து.

37. அர்ஜுனன் கூறினான்:
ஓ, கிருஷ்ணா, நம்பிக்கையுடன் யோகத்தை அடைய முயற்சி செய்து, அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் தன் முயற்சியில் தோல்வி அடைபவனின் கதி என்ன?

38. வலுவான கரங்களை உடையவனே! உலக இன்பங்களைக் கைவிட்டு, யோக நிலை அடையும் முயற்சியிலும் தோல்வியுற்று, இரண்டையும்  இழந்து போக்கிடமின்றி நிற்பவன் சிதறுண்ட மேகத்தைப் போல் கதியற்றுப் போக வேண்டியதுதானா?

39. ஓ, கிருஷ்ணா! என்னுடைய இந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வை. உன்னைத் தவிர வேறு யாராலும் இதை விளக்க முடியாது.

40. பகவான் கூறினார்:
"பார்த்தா! நற்செயல்களில் ஈடுபடும் அத்தகைய யோகப் பயிற்சியாளனுக்கு இந்த உலகிலும் சரி, மேலுலகிலும் சரி  அழிவு ஏற்படாது. நற்செயல்களில் ஈடுபடுபவனுக்கு எப்போதுமே தீங்கு ஏற்படாது.

41. யோக முயற்சியில் வெற்றி பெறாதவன் மரணத்துக்குப் பிறகு புண்ணியம் செய்தவர்கள் வாழும் உலகங்களில் பல வருடங்கள் வாழ்ந்த பின், பக்தி மிகுந்த, செல்வச் செழிப்புள்ள ஒரு குடும்பத்தில் மீண்டும் பிறப்பான்.

42. அல்லது அவன் மேன்மையான அறிவு படைத்த யோகிகளின் குடும்பத்தில் கூடப் பிறக்கலாம். ஆனால் இது போன்ற பிறப்பைப் பெறுவது மிகவும் அரிதான விஷயம்.

43. குரு வம்சத்தவனே! அப்போது அவன் தன் முந்தைய பிறப்பின் அறிவைத் திரும்பப் பெற்று, தன் நோக்கத்தை முழுமையாக அடைவதற்கு மீண்டும் முயற்சி செய்வான்.

44. தன் முந்தைய பிறப்பின் சாதனையின் விளைவாக, அவன் யோகப்பாதைக்கு ஈர்க்கப்படுகிறான். அத்தகைய ஆர்வமுள்ள ஞானத்தேடல் கொண்டவன் வேத மந்திரங்களின் சொற்களைத் தாண்டி ஞானம் பெறுகிறான்.

45. உறுதியுடன் முயற்சி செய்யும் யோகி பற்றுக்களிலிருந்து நீங்கி, பல பிறவிகளில் தன்னை முழுமையாகச் சீர்படுத்திக்கொண்டு மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.

46. யோகி தவசியை விட உயர்ந்தவன், ஞானியை விட உயர்ந்தவன், பலனை எதிர்பார்த்துச் செயல்படுபவனை விட உயர்ந்தவன். எனவே, அர்ஜுனா, நீ ஒரு யோகியாக இரு.

47. முழு நம்பிக்கையுடன் மனத்தில் என்னை நிறுத்தி, உண்மையாகவும், அர்ப்பணத்துடனும் என்னிடம் பக்தி செலுத்துபவன் எல்லா யோகிகளிலும் சிறந்த யோகியாகக் கருதப்படுவான்.

அத்தியாயம் 7