Tuesday, December 29, 2020

14. 13ஆவது அத்தியாயம் - ஜீவாத்மாவும், பரமாத்மாவும்

1. அர்ஜுனன் கூறினான்:
ஓ, கேசவா! பிரகிருதி (இயற்கை, பொருள்), புருஷன் (ஆத்மா), க்ஷேத்ரம் (இடம்), க்ஷேத்ரக்ஞன் (உடலை அறிந்திருப்பவன்), ஞானம் (அறிவு), ஞேயம் (அறியப்படுவது) ஆகியவை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

2. பகவான் கூறினார்:
குந்தியின் மைந்தனே! இந்த உடல் க்ஷேத்ரம் என்றும், இந்த உடலை அறிபவன் க்ஷேத்ரக்ஞன் என்றும் இவற்றை அறிந்தவர்களால் (முனிவர்களால்) கூறப்பட்டுள்ளது.

3. பரத குலத் தோன்றலே! எல்லா க்ஷேத்ரங்களுக்கும் க்ஷேத்ரக்ஞன் நானே என்று அறிவாயாக. இந்த உடலையும், அதை அறிந்திருப்பவனையும் பற்றி  அறிந்திருப்பதுதான் ஞானம் என்பது என் கருத்து.

4. உடல், அதன் இயல்பு, அது அடையும் மாற்றங்கள், அவை எப்போதிலிருந்து ஏற்படுகின்றன, அதை அறிபவன் யார் அவனுடைய சக்திகள் என்ன என்பவை பற்றி நான் சுருக்கமாகக் கூறுவதைக் கேள்.

5. இந்த அறிவு முனிவர்களால் பல்வேறு பாடல்கள், வேத மந்திரங்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகியவை மூலம் வெவ்வேறு விதங்களில் காரணங்களுடன் ஆழமாக விளக்கப்பட்டிருக்கிறது.

6, 7. பஞ்ச பூதங்கள் (நிலம், நீர், வான், தீ, ஆகாயம் அல்லது வெற்றிடம்), அகங்காரம் (தான் என்னும் எண்ணம்), அறிவு, ஆத்மா, ஞானேந்தரியங்கள் (மெய், வாய் - சுவை, உணர்தல் கண், மூக்கு, செவி), கர்மேந்திரியங்கள் (வாய்- பேசுதல், கைகள், கால்கள், பிறப்புறுப்பு, ஆசனவாய்), ஞானேந்திரியமான மனம் என்ற 11 இந்திரியங்கள், புலன்களால் அறியப்படும் 5 பொருட்கள் (சுவை, ஒளி, உணர்வு, ஓசை, நாற்றம்), விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, துயரம், கட்டமைக்கப்பட்டுள்ள உடல், அறிதல் அல்லது உணர்தல், உறுதி இவற்றைக் கொண்டு க்ஷேத்திரம் என்ற இந்த உடல் அதன் மாறுபாடுகளுடன் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

8-12. பணிவு, செருக்கின்மை, அஹிம்சை, சகிப்புத்தன்மை, நேர்மை, குருவுக்கு சேவை செய்தல், தூய்மை, உறுதி, சுயக் கட்டுப்பாடு, வைராக்கியம் (புலனுக்கு இன்பம் அளிக்கும் பொருட்களில் பற்றின்றி இருத்தல்), அகங்காரமின்மை (தான் என்ற உணர்வின்றி இருத்தல்), பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் இவற்றால் விளையும் துயரம், வலி இவற்றை எப்போதும் உணர்ந்திருத்தல், பற்றில்லாமல் இருந்து கொண்டு, மனைவி, மக்கள், குடும்பம், மற்ற உறவுகளிடம் அதிக ஒட்டுதல் இன்றி, பிடித்த, பிடிக்காத நிகழ்வுகளைச் சமநிலையில் எதிர் கொண்டு கொண்டு, மனத்தை வேறு திசைகளில் செலுத்தாமல் என்னிடம் பக்தி செலுத்திக் கொண்டு, மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் தனிமையான இடங்களை விரும்பி அமைதியாக இருந்து கொண்டு, எப்போதும் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்தபடி, ஆன்மீகம் பற்றிய அறிவிலும், உண்மையை விளக்கும் தத்துவங்களிலும் ஈடுபாடு கொண்டிருத்தல் இவை மட்டும்தான் அறிவு, மற்றவை அனைத்தும் அறியாமை.   

13. அறியப்பட வேண்டியது எது, எதை அறிந்தால் மரணமற்ற நிலை கிடைக்கும் என்பதை நான் இப்போது கூறுகிறேன். துவக்கமற்ற அது என்னை உயர்ந்த பொருளாகக் கொண்டது. இருப்பவை, இல்லாதவை இண்டுக்கும் அப்பாற்பட்ட அது பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது.

14. அதற்கு எல்லா இடங்களிலும் கைகளும், கால்களும் உண்டு. எங்கும் கண்கள், தலைகள், வாய்கள், காதுகள் கொண்டு, அது எல்லா இடங்களையும் வியாபித்தபடி இவ்வுலகில் இருக்கிறது.

15. அது எல்லாப் புலன்களுக்கும், எல்லா குணங்களுக்கும் மூலம், ஆயினும் அது புலன்கள் இல்லாதது. எதிலும் பற்றில்லாமல் இருக்கிறது, ஆயினும் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. குணங்கள் ஏதும் இல்லாமல் இருக்கிறது, ஆயினும் எல்லா குணங்களையும் அனுபவிப்பதாக இருக்கிறது.

16. அசையும் மற்றும் அசையாத எல்லாப் பொருட்களுக்கு உள்ளேயும், வெளியிலும் அது இருக்கிறது. அது நுணுக்கமானது என்பதால் அறிய முடியாததாக இருக்கிறது. அது வெகு தொலைவிலும், மிக அருகிலும் இருக்கிறது.

17. அது பிரிக்கப்பட முடியாதது, ஆனால் எல்லாப் பொருட்களுக்குள்ளும் பிரிந்திருக்கிறது, எல்லாவற்றையும் தாங்குகிறது, ஆயினும் எல்லாவற்றையும் தன்னுள் விழுங்குவது என்றும், எல்லாவற்றையும் படைப்பது என்றும் அறியப்படுகிறது.

18. ஒளி தரும் பொருட்களுக்கெல்லாம் ஒளியாக, இருளைக் கடந்ததாக அது இருக்கிறது. அது அறிவாகவும், அறியப்பட வேண்டியதாகவும், அறிவின் நோக்கமாகவும் இருக்கிறது. அது அனைவரின் இதயங்களுக்குள்ளும் உள்ளது.

19. இவ்வாறு க்ஷேத்ரம், அறிவு, அறியப்பட வேண்டியது ஆகியவை என்னால்  விவரிக்கப்பட்டுள்ளன. என்னிடம் பக்தி செலுத்துபவன் இதை அறிந்த பிறகு என் இயல்பை அடைவான்.

20. பிரகிருதி (பஞ்ச பூதங்களால் ஆன உலகம்), புருஷன் (ஆத்மா ) இருவருமே ஆரம்பம் இல்லாதவர்கள் என்று அறிவாயாக. எல்லா மாற்றங்களும் குணங்களும் பிரகிருதியிலிருந்தே உருவானவை.

21. செயல்களையும் அவற்றுக்கான காரணங்களையும் உருவாக்குவது பிரகிருதியின் பொறுப்பு என்றும், இன்ப துன்பங்களை அனுபவிப்பதை  உருவாக்குவது புருஷனின் பொறுப்பு என்றும் கூறப்பட்டிருக்கிறது.

22. பிரகிருதியில் (உடலில்) இருக்கும் புருஷன் பிரகிருதியால் உருவாக்கப்பட்ட மூன்று குணங்களையும் நிச்சயமாக அனுபவிக்கிறான். குணங்களுடனான தொடர்பு நல்ல பிறப்புகளுக்கும் தீய பிறப்புகளுக்கும் காரணமாகிறது.

23. உடலில் இருந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டும், கட்டுப்படுத்திக் கொண்டும், ஆதரித்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் இருக்கும் மகேஸ்வரான பரமாத்மா புருஷன் என்று அழைக்கப்படுகிறார்.

24. புருஷன், பிரகிருதி மற்றும் குணங்களை இவ்விதமாகப் புரிந்து கொண்டவன் எந்த நிலையில் இருந்தாலும் மீண்டும் பிறக்க மாட்டான்.

25. சிலர் புருஷனாகிற ஆத்மாவை தியானத்தால் அறிகிறார்கள். சிலர் தங்களுக்குள் இருக்கும் ஆத்மாவைத் தானே (உணர்ந்து) அறிகிறார்கள். சிலர் ஞான யோகத்தாலும்,  இன்னும் சிலர் கர்ம யோகத்தாலும் ஆத்மாவை அறிகிறார்கள்.

26. மற்றவர்கள் இந்த வழிகள் எதையும் அறியாமல் மற்றவர்களிடம் கேட்டதை வைத்து (என்னை) வணங்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் கூடக் கேள்வி ஞானத்தின் மூலமே மரணத்தை வெல்லும் நிலையை அடைகிறார்கள்.

27. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இவ்வுலகில் தோன்றியது எதுவும், அது அசையும் பொருளாயிருந்தாலும், அசையாப் பொருளாயிருந்தாலும், அது க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞர் இரண்டும் இணைந்த தன்மை கொண்டதுதான் என்பதை அறிவாயாக.

28. எல்லாப் பொருட்களுக்குள்ளும் சமமாக வசித்து வரும் பரம்பொருளை அழிபவற்றுக்குள் இருக்கும் அழியாத பொருளாக எவன் பார்க்கிறனோ அவனே (உண்மையாக) பார்க்கிறான்.

29. எல்லா இடங்களிலும் சமமாக நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளை  எங்கும் சமமாகப் பார்ப்பவன் தன் ஆத்மாவைத் தாழ்த்துவதில்லை. அதன் விளைவாக அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

30, பிரகிருதி மட்டுமே எல்லாச் செயல்களையும் செய்வதாகவும், ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதாகவும் எவன் பார்க்கிறானோ, அவன் பார்க்கிறான்.

31.தனித்தனியான  பல்வேறு உயிர்களும்,பிற பொருள்களும் ஒரே பொருளில் நிலைபெற்று அதனிடமிருந்து விரிந்து பெருகுவதை ஒருவன் உணரும்போது அவன் பிரம்மத்தை அடைகிறான்.

32. குந்தியின் மைந்தனே!  ஆரம்பமும் முடிவும் இல்லாத, மாற்றமடையாத, குணங்கள் இல்லாத பரமாத்மா உடலில் இருந்தாலும், அது எதையும் செய்வதில்லை, எதனாலும் களங்கப்படுவதுமில்லை.

33. எல்லா இடத்திலும் இருக்கும் ஆகாயம் (இடம் -  space)) எப்படி எதனாலும் களங்கப்படுவதில்லையோ, அது போல் ஆத்மா உடலில் எல்லா இடத்திலும் இருந்தாலும் அது களங்கப்படுவதில்லை.

34. பரத வம்சத்திவனே! ஒரு சூரியன் இந்த உலகம் முழுமைக்கும் ஒளியூட்டுவது போல், க்ஷேதரக்ஞன் (ஆத்மா), க்ஷேத்ரம் (உடல்) முழுவதற்கும் ஒளியூட்டுகிறான்.

35. க்ஷேத்ரத்துக்கும் க்ஷேத்ரக்ஞனுக்கும் உள்ள வேறுபாட்டைத் தன் அறிவினால் (சிந்தனையால்) உணர்ந்து, இந்த பிரகிருதியிலிருந்து விடுதலை பெறும் முறையையும் அறிபவர்கள் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். 


Thursday, December 17, 2020

13. 12ஆவது அத்தியாயம் - பக்தி யோகம்

1. அர்ஜுனன் கூறினான்:
உன்னையே (உன் வடிவத்தை) எப்போதும் வணங்குபவர்கள், உன் எல்லையற்ற, வடிவற்ற நிலையை வழிபடுபவர்கள் என்ற இரண்டு வகை பக்தர்களில் எந்த வகையினர் யோகப் பயிற்சியில் சிறந்தவர்கள்?

2. பகவான் கூறினார்:
என்னிடம் மனத்தைச் செலுத்தி, பக்தியுடனும், சிரத்தையுடனும் என்னை எப்போதும் வணங்குபவர்களே யோகத்தில் சிறந்து விளங்குபவர்களாக என்னால் கருதப்படுவார்கள்.

3, 4. ஆயினும், அழிவற்ற, வரையறுக்க முடியாத, எங்கும் நிறைந்திருக்கும், எண்ணங்களால் உணர முடியாத, மாறாத, அசைக்க முடியாத, நிலையான பரம்பொருளை, தங்கள் புலன்களை அடக்கி, எல்லா இடங்களிலும் சமநிலையில் இருந்து, எல்லோருக்கும் நன்மை செய்து கொண்டு வழிபடுபவர்களும் என்னிடம்தான் வருகிறார்கள். 

5. வடிவம் இல்லாத பரம்பொருளை வழிபடுவதில் மனத்தைச் செலுத்தி இருப்பவர்களுக்கு அது அதிகக் கடினமாக இருக்கும். உடலுடன் வாழ்பவர்களுக்கு (வடிவில்லாத) அந்த இலக்கை அடைவதில் முன்னேற்றம் காண்பது கடினமானது.

6, 7.  ஆனால், எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, என்னிடம் ஈடுபாடு கொண்டு, வேறு சிந்தனையின்றி, பக்தி யோகத்தால் என்னையே தியானிப்பவர்களை இறப்பு என்னும் உலக வாழ்க்கைக் கடலிலிருந்து விரைவிலேயே மீட்பவனாக நான் இருப்பேன், பார்த்தா!  

8. உன் மனத்தை என்னிடம் நிலை பெறச் செய்து உன் அறிவையும் என்னிடத்தில் செலுத்து. அதற்குப் பிறகு நீ என்னிடம் வசிப்பாய். இதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

9. தனஞ்சயா! உன் மனத்தை முழுமையாக என்னிடம் செலுத்த முடியாவிட்டால், பக்தி யோகத்தைப் பயிற்சி செய். இவ்விதமாக, என்னை அடைவதற்கான விருப்பத்தை உன்னால் வளர்த்துக் கொள்ள முடியும்.

10. உன்னால் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்ய முடியாவிட்டால், நீ செய்யும் செயல்களை என் பணியாகக் கருதி, அவற்றை எனக்கு அர்ப்பணித்துச் செயல்படு. எனக்காகப் பணி செய்வதால் நீ முழுமை அடைவாய்.

11. இதைச் செய்வது கூட உனக்கு இயலாவிட்டால்,உன் செயல்களின் பலன்கள் அனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு என்னைச் சரணடை.

12. பயிற்சியை விட ஞானம் நிச்சயம் உயர்ந்ததுதான். ஆனால் ஞானத்தை விட தியானம் உயர்ந்தது. செயல்களின் பலன்களைத் தியாகம் செய்வது தியானத்தை விட உயர்ந்தது. பலன்களைத் தியாகம் செய்வதால் அமைதி கிட்டும். 

13, 14. பொறாமை உணர்வு இன்றி, எல்லா உயிர்களிடமும் அன்பும், கருணையும் கொண்டு, எதையும் தனக்குச் சொந்தமென்று நினைக்காமல், அகங்காரம் இல்லாமல், இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையிலும், பிறர் குற்றங்களைப் பொறுக்கும் மனநிலையுடனும், எப்போதும் திருப்தியுடனும் இருந்து கொண்டு, உறுதியான மனத்துடன் யோக நிலையில் இருந்து கொண்டு, தன் மனத்தையும், அறிவையும் என்னிடம் அர்ப்பணித்து இருக்கும் பக்தன் என்னால் விரும்பப்படுபவனாக இருப்பான்.

15. உலகுக்கு (மற்றவர்களிக்கு)த் தொந்தரவாக இல்லாமலும், உலகத்தால் (மற்றவர்களின் செயல்களால்) பாதிக்கப்படாமலும், மகிழ்ச்சி, கோபம், பயம், உத்வேகம் (அதீதமான உற்சாகம், கவலை, படபடப்பு போன்றவை) ஆகியவற்றிலிருந்து விடுபட்டும் இருப்பவன் எனக்கு விருப்பமானவன்.   

16. எதிர்பார்ப்புகள் இல்லாதவனாக, தூய்மையானவனாக, திறமையுடன் செயல்படுபவனாக, கவலைகள் இல்லாதவனாக, துயரப்படாதவனாக, எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணிப்பவனாக இருக்கும் என் பக்தன் எனக்கு விருப்பமானவன்.

17. விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, சோகம் ஆகியவை இல்லாத, நன்மை-தீமை இரண்டையும் ஒன்றாகக் கருதும் பக்திமான் எனக்கு விருப்பமானவன்.

18, 19. நண்பனிடமும் எதிரியுடனும் சமமாக நடந்து கொண்டு, கௌரவம் அவமானம் இரண்டையும் ஒன்றாகக் கருதி, வெப்பம் - குளிர், சுகம் - துக்கம் இவற்றைச் சமநிலையில் எதிர்கொண்டு, எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டு, புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதி,  மௌனமாகவும் (அதிகம் பேசாமல்), திருப்தியுடனும், எந்த ஒரு இருப்பிடத்தையும் நிலையானதாகக் கருதாமல், உறுதியான சிந்தனையுடன் என்னிடம் பக்தியில் ஈடுபட்டிருப்பவன் எனக்கு விருப்பமானவன்.

20. உயர்ந்ததான தர்மத்தை விதிக்கப்பட்டுள்ளபடி பின்பற்றி, என்னை உயர்ந்த பரம்பொருளாக நினைத்து உறுதியுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எனக்கு மிகவும் விருப்பமானவன்.

அத்தியாயம் 13 - ஜீவாத்மாவும் பரமாத்மாவும் 

Thursday, December 10, 2020

12.11 ஆவது அத்தியாயம் - விஸ்வரூப தரிசனம்

1. அர்ஜுனன் கூறினான்:
என்னை உய்விக்கும் விதமாக ஆதியான பொருள் பற்றிய மிகவும் ரகசியமான விஷயங்களை நீ கூறியதால் என் மாயை அகன்று விட்டது.

2. தாமரைக் கண்ணா! எல்லாப் படைப்புகளும் உருவாவது பற்றியும், அழிவது பற்றியும், உன் அழிவற்ற உயர்வுகளைப் பற்றியும் நான் உன்னிடம் விவரமாகக் கேட்டறிந்தேன்.

3. பரமேஸ்வரா! உன் ஆத்ம நிலை பற்றி நீ விரிவாக விளக்கினாய். ஆயினும், புருஷோத்தமா, உன் தெய்வீக வடிவை நான் காண விரும்புகிறேன்.

4. பிரபு, யோகேஸ்வரா! என்னால் அந்த வடிவைக் காண முடியும் என்று நீ கருதினால், உன் பிரம்ம வடிவத்தை எனக்குக் காட்டு.

5. பகவான் கூறினார்:
பார்த்தா! என் கோடிக்கணக்கான, பல்வகையான வண்ணமயமான தெய்வீக வடிவங்களைப் பார்.

6. ஆதித்யர்கள் (அதிதியின் 12 புதல்வர்கள்), வசுக்கள் (எட்டு வசுக்கள்), ருத்ரர்கள் (11 ருத்ரர்கள்), அஸ்வினிகள் (இரட்டையரான அஸ்வினி தேவதைகள்), மருத்துக்கள் (ஒன்பது மருத்துக்கள்) ஆகியோரைப் பார். பரத வம்சத்தவனே! நீ இதுவரை பார்க்காத கணக்கற்ற அற்புதங்களைப் பார்.

7. குடகேசா (தூக்கத்தை வென்றவனே)! அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் கொண்ட அண்டம் முழுவதையும் இன்னும் நீ பார்க்க விரும்பும் எதையும் ஒரே இடத்தில் என் உடலில் இப்போது பார்.

8. ஆனால் உன்னுடைய இயல்பான கண்களால் என்னை உன்னால் பார்க்க முடியாது. எனவே என் யோக ஐஸ்வரியத்தைப் பார்க்க உனக்கு நான் தெய்வீகக் கண்களை வழங்குகிறேன்.

9. சஞ்சயன் கூறினான்:
அரசே! இவ்வாறு கூறி விட்டு, மகாயோகியான ஹரி (விஷ்ணு) அர்ஜுனனுக்குத் தன் உயர்ந்த, எல்லாம் நிறைந்த தோற்றத்தைக் காட்டினார்.

10. கணக்கிட முடியாத எண்ணிக்கையில் அற்புதத் தோற்றங்களாக, எண்ணற்ற வாய்கள், கண்கள், பல தெய்வீக ஆபரணங்கள், தாக்கத் தயாரான நிலையில் பல பெரிய ஆயுதங்கள் ஆகியவற்றை அர்ஜுனன் பார்த்தான்.

11. பல தெய்வீக மாலைகளையும், உடைகளையும் அணிந்து, பல தெய்வீக நறுமணப் பொருட்களையும், சாந்துகளையும் பூசிக்கொண்டு எல்லையற்றதாகவும், வியப்பூட்டுவதாகவும், எங்கும் நிறைந்ததாகவும் இருந்தது அவருடைய தோற்றம். 

12. ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றினால் அவற்றின் ஒளி ஒருவேளை அந்தப் பரம்பொருளின் தோற்றத்துக்கு ஒப்பானதாக இருக்கலாம்.

13. இப்போது அந்த தேவர்களுக்கெல்லாம் தேவனின் உடலில் அண்டம் முழுவதையும் அதன் பல பிரிவுகளாக ஒரே இடத்தில் அர்ஜுனன் பார்த்தான்.

14. அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு ஆச்சரியத்தால் திக்குமுக்காடிய அர்ஜுனன், புளகாங்கிதத்தால் தன் உடலிலிருந்த ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்து நிற்க, தன் முன் நின்ற கடவுளான கண்ணனைத் தலை தாழ்த்தி வணங்கி விட்டு, கை கூப்பியபடி அவரிடம் கூறினான்

15. அர்ஜுனன் கூறினான்:
தேவனே! உன் உடலில் எல்லா தேவர்களையும், பல்வகை உயிர்களையும் பார்க்கிறேன். தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவையும், சிவனையும், பல தெய்வீக முனிவர்களையும், பாம்புகளையும் பார்க்கிறேன்.

16, எண்ணிலடங்காத கைகள், வயிறுகள், வாய்கள், கண்கள் ஆகியவற்றை நான் பார்க்கிறேன். முடிவற்ற உருவத்துடன் நீ எங்கும் இருக்கிறாய். பிரபஞ்சத்தின் நாயகனே! அண்டம் தழுவிய உன் உருவத்தின் துவக்கம், நடு, முடிவு எதையும் என்னால் காண முடியவில்லை.

17. உன் கிரீடங்கள், கதைகள், சக்கரங்கள் ஆகியவற்றால், உன் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவுகிறது. அளவிட முடியாத சூரியனைப் போன்ற உன் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவுவதால் உன்னைக் காண்பது எனக்குக் கடினமாக இருக்கிறது.

18. நீ அழிவில்லாதவன், அறியப்பட வேண்டிய இறுதியான உண்மை நீயே. இந்த உலகம் முழுவதும் ஓய்வெடுப்பது உன்னிடம்தான். என்றும் நிலையான தர்மத்தைக் காப்பவன் நீயே. நீதான் மிகவும் பழமையானவன் என்று நான் உறுதியாக அறிகிறேன்.

19. துவக்கம், நடு, முடிவு இவை எதுவும் இல்லாதவனாகவும், எல்லையற்ற சக்தி கொண்டவனாகவும், எண்ணில்லாத கரங்களையும், சூரியனையும், சந்திரனையும் இரு கண்களாகக் கொண்டவனாகவும் உன்னை நான் பார்க்கிறேன். உன் வாய்களுக்குள்ளிருந்து ஒரு பிரகாசமான நெருப்பு வீசிக் கொண்டிருக்கிறது. உன் உள்ளொளியால் இந்த அண்டம் முழுவதையும் நீ வெப்பமாக வைத்திருக்கிறாய்.

20. ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் அனைத்திலும், எல்லாத் திசைகளிலும் நீ வியாபித்திருக்கிறாய். பரமாத்மாவே! வியப்பும் அச்சமும் ஊட்டும் உன்னுடைய இந்தத் தோற்றத்தைக் கண்டு மூவுலகங்களும் அச்சத்தினால் நடுங்குகின்றன.

21. விண்ணுலகில் உள்ள தேவர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக உனக்குள் நுழைகிறார்கள். அவர்களில் சிலர் பயத்துடன் உன்னைக் கை கூப்பி வணங்கிப் பிரார்தனை செய்கிறார்கள். பல முனிவர்களும், சித்தர்களும்  வேதங்களில் உள்ள ஸ்தோத்திரங்களைக் கூறி உன்னைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

22. (பதினோரு) ருத்ரர்கள், (பன்னிரண்டு) ஆதித்யர்கள், (எட்டு) வசுக்கள், சாத்யர்கள், வசுதேவர்கள், (இரட்டையரான) அஸ்வினி தேவர்கள், மருத்துக்கள், பித்ருக்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், அரக்கர்கள், சித்தர்கள் அனைவரும் உன்னை வியப்புடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

23. சக்தி வாய்ந்த கரங்களைக் கொண்டவனே! இத்தனை முகங்கள், கண்கள், வலுவான கரங்கள், கால்கள், பாதங்கள், வயிறுகள், பற்கள் ஆகியவற்றைக் கொண்ட உன் பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்து எல்லா உலகங்களும் நடுங்குகின்றன, நானும் நடுங்குகிறேன்.

24, 25. ஓ, விஷ்ணுவே! பலவேறு வண்ணங்களுடனும், அகலத் திறந்த வாய்களுடனும், ஒளி விடும் பரந்த கண்களுடனுமான விண்ணை முட்டும் உன் விஸ்வரூபத்தைக் கண்டு என் மனத்தில் அச்சம் ஏற்பட்டு, என் உறுதியும், சமநிலையும் குலைந்து போயிருக்கின்றன. அச்சமூட்டும் பற்களுடன் பிரளய கால நெருப்பு போல் என் முன் நிற்பது போல் தோற்றமளிக்கும் உன் முகத்தைப் பார்த்த பிறகு எனக்கு திக்குத் திசை தெரியவில்லை, அமைதி கிட்டவில்லை. எல்லோருக்கும் ஈசனே! எல்லா உலகங்களிலும் வசிப்பவனே! என் மீது கருணை காட்டு.

26, 27. திருதராஷ்டிரரின் புதல்வர்கள், அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசர்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் எங்கள் தரப்பிலுள்ள படைத்தலைவர்கள் ஆகியோர், அச்சமூட்டும் பற்கள் நிறைந்த உன் வாய்க்குள் வேகமாகப் புகுந்து செல்கிறார்கள். அவர்களில் சிலர் உன் பற்களுக்கிடேயே தங்கள் தலைகள் நசுக்கப்பட்டு அங்கேயே சிக்கி இருக்கிறார்கள்.

28. நதிகளிலிருந்து பல்வேறு நீரோட்டங்கள் கடலை நோக்கிச் செல்வது போல், மனிதர்கள் வாழும் உலகிலிருந்து இந்த வீரர்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் தீப்பிழம்பாகத் திகழும் உன் வாய்களுக்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். 

29. விட்டில் பூச்சிகள் தங்கள் அழிவைத் தேடி எரியும் நெருப்பை நோக்கி அதி வேகத்துடன் செல்வது போல், இந்த மனிதர்களும் அழிவதற்காக உன் வாய்களுக்குள் அதி வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.

30. இவர்கள் அனைவரையும் எல்லாத் திசைகளிலிருந்தும் நெருப்பாகக் கனல் விடும் உன் வாய்களுக்குள் நீ உறிஞ்சிக் கொண்டிருக்கிறாய். ஓ, விஷ்ணு! நெருப்பாகக் கனலும் உன் ஒளிக்கதிர்களால் இந்த அண்டம் முழுவதும் ஒளியும் வெப்பமும் பெற்று விளங்குகிறது.

31. இந்த பயங்கர உருவத்தில் இருக்கும் நீ யார் என்பதை எனக்கு தயவு செய்து விளக்கு. எல்லோருக்கும் இறைவனான உன்னை வணங்குகிறேன். என்னிடம் கருணை காட்டு. ஆதிமூலமான உன்னை நான் தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். உன் இயல்பையும், செயல்முறையையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

32. பகவான் கூறினார்:
நான் எல்லா உலகங்களையும் அழிக்கும் கொடுமையான காலம். இப்போது நான் மனிதர்களை அழிப்பதில் ஈடுபட்டுள்ளேன். நீ இல்லா விட்டாலும் எதிர் எதிர் சேனைகளில் உள்ள எல்லா வீரர்களும் அழிக்கப்படுவார்கள்.

33. எனவே, எழுந்து போய்ப் போர் செய்து புகழடைந்து, உன் எதிரிகளை வென்று அளவற்ற செல்வம் கொண்ட நாட்டை ஆள்வாயாக. சவ்யசாசி (இரு கைகளுள் எதனாலும் அம்பு செலுத்தும் திறமை பெற்றவனே)! முன்னமே உருவாக்கப்பட்ட என் திட்டத்தால் அந்த வீரர்கள் ஏற்கெனவே என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள். நீ ஒரு கருவிதான்.

34. துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் என்னால் ஏற்கெனவே கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே சஞ்சலம் கொள்ளாதே! போரில் ஈடுபடு. உன் எதிரிகளை நீ நிச்சயம் அழிப்பாய்.

35. சஞ்சயன் கூறினான்:
கேசவனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அர்ஜுனன் தன் கைகளைக் கூப்பிக்கொண்டு, உடல் நடுங்கியபடி கிருஷ்ணரை மீண்டும் மீண்டும் வணங்கி விட்டு உணர்ச்சி ததும்பிய குரலில் கூறினான்:

36. அர்ஜுனன் கூறினான்:
ரிஷிகேஸா (புலன்களுக்கு ஈசனே)! உன் மேன்மைகளால் இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சியூட்டப்பட்டு, உன்னிடம் கவர்ந்து இழுக்கப்படுவது இயல்புதானே! அரக்கர்கள் எல்லாப் புறங்களிலும் பறந்து கொண்டிருக்க, சித்தர்கள் கூட்டம் கூட்டமாக உன்னை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

37. மஹாத்மாவே! அவர்கள் ஏன் உன்னை வணங்க மாட்டார்கள்? நீ பிரம்மாவை விட உயர்ந்தவன், ஆதியான பரம்பொருள், எல்லையற்றவன். தேவர்களுக்கெல்லாம் தேவன். உலகுக்கு அடைக்கலம் அளிப்பவனே! நீ அழிவற்றவன், காரணம் நீ, காரியம் நீ, இவை இரண்டையும் கடந்து நிற்பவனும் நீ.

38. நீ மூலமான கடவுள், பழமையானவன், எல்லாவற்றுக்கும் மேலானவன், இந்த உலகத்துக்கும் மற்ற உலகங்களுக்கும் ஆதாரமானவன், அனைத்தையும் அறிபவன், அறியப்பட வேண்டியவன், சென்றடையப்பட வேண்டிய உயர்ந்த இடம். உன் முடிவற்ற வடிவங்களால் எல்லா உலகங்களும் வியாபிக்கப்பட்டுள்ளன.

39. வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரம்மா, எல்லாருக்கும் மூதாதையர் நீயே! உன்னை  ஆயிரம் முறை வணங்குகிறேன். திரும்பத் திரும்ப உன்னை வணங்குகிறேன்.

40. முன்புறத்திலிருந்தும், பின்புறத்திலிருந்தும் மற்றும் எல்லாத் திசைகளிலிருந்தும் உன்னை வணங்குகிறேன். அளவற்ற திறனுடனும், எல்லையற்ற சக்தியுடனும் நீ எங்கும் நிறைந்திருக்கிறாய். எல்லாமே உன்னால் சூழப்பட்டுள்ளன. எல்லாமே நீதான்.

41. உன் மேன்மையை அறியாமல், என்னை அறியாமலோ அல்லது உன் மேல் இருக்கும் அன்பினாலோ என் நண்பனே என்றும், கிருஷ்ணா என்றும், யாதவா என்றும் பலவிதமாக உன்னை நான் அழைத்திருக்கிறேன்.

42. அச்சுதா! விளையாடும்போதோ, படுத்திருக்கும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ, உணவு உண்ணும்போதோ, தனியாக இருக்கும்போதோ, மற்ற நண்பர்களுடன் இருக்கும்போதோ, உன்னைச் சிறுமைப்படுத்தும் விதமாகவோ, மரியாதைக் குறைவாகவோ நான் நடந்து கொண்டிருந்தால், அளவிட முடியாதவனே, என்னை மன்னிப்பாயாக.

43. அசையும் மற்றும் அசையாப் பொருட்கள் உள்ளிட்ட இந்த உலகம் முழுவதற்கும் தந்தை நீ. வணங்கப்பட வேண்டியவன் நீ, ஆசான் நீ, புகழுக்குரியவன் நீ. இந்த மூன்று உலகங்களிலும் உனக்குச் சமமானது எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கையில், எல்லையற்ற சக்தி கொண்டவனே! உன்னை விட உயர்வானது வேறு எது இருக்க முடியும்?

44. எனவே, என் உடலை உன் காலடியில் வைத்து உன்னை வணங்கி, உன் அருளை வேண்டுகிறேன். ஒரு தந்தை தன் மகனையும், ஒருவன் தன் நண்பனையும், ஒரு காதலர் தான் காதலிப்பவரையும்  மன்னிப்பது போல் என்னை மன்னிப்பாயாக.  

45. இதுவரை எப்போதும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே சமயம் என் மனது கலக்கமடைந்து பயத்துடனும், கவலையுடனும் இருக்கிறது. தேவர்களுக்கெல்லாம் தேவனே! உலகத்தின் இருப்பிடமே! ஆகவே, உன் இயல்பான தெய்வீக உருவத்தை எனக்குக் காட்டு.

46. திருமுடி அணிந்தும், கைகளில் கதை மற்றும் சங்குடனுமான உன் இயல்பான உருவத்தைக் காண விரும்புகிறேன்.ஆயிரம் கரங்கள் கொண்டவனே! நான்கு கரங்களுடனான உன் முந்தைய உருவத்தை எடுத்துக் கொள்.

47. பகவான் கூறினார்:
அர்ஜுனா! என் மேலான இந்த உருவத்தை என் ஆத்ம யோகத்தின் சக்தியால் மனம் மகிழ்ந்து நான் உனக்குக் காட்டினேன். ஒளி மிகுந்த, எல்லையற்ற, ஆதியான இந்த விஸ்வரூபத்தை உனக்கு முன் வேறு யாரும் பார்த்ததில்லை.

48. குரு வம்சத்தவரில் சிறந்தவனே! வேதங்களைக் கற்பதன் மூலமோ, யாகங்கள் செய்வதன் மூலமோ, தானங்கள் செய்வதன் மூலமோ, சடங்குகளைச் செய்வதன் மூலமோ அல்லது பல்வகைத் தவங்களைச் செய்வதன் மூலமோ  என்னைக் காண முடியாது.  இந்தப் பூவுலகில் உன்னைத் தவிர வேறு யாரும் என்னுடைய இந்த உருவத்தைக் கண்டதில்லை

49. என்னுடைய இந்த பயங்கரமான உருவத்தைப் பார்த்து மயக்கமோ, கலக்கமோ அடையாதே! பயங்களிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான மனத்துடன் என்னுடைய இந்த உருவத்தை மீண்டும் பார்.

50. சஞ்சயன் கூறினான்;
இவ்வாறு கூறிய பிறகு, வாசுதேவர் தன் இயல்பான (நான்கு கரங்களுடன் கூடிய) உருவத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார். பிறகு, மீண்டும் தன் இனிமையான (இரண்டு கரங்களுடனான) வடிவத்தை எடுத்துக்கொண்டு அந்த மஹாத்மா அச்சமடைந்திருந்த அர்ஜுனனை அமைதிப்படுத்தினார்.

51. அர்ஜுனன் கூறினான்:
ஜனார்த்தனா! இந்த உன் இனிமையான மானுட உருவத்தைப் பார்த்ததும், என் மனம் அமைதி அடைந்து விட்டது. நான் என்  இயல்பான நிலைக்கு வந்து விட்டேன்.

52.  பகவான் கூறினார்:
நீ இப்போது காணும் (இரண்டு கரங்களுடனான) என்னுடைய தோற்றத்தைக் காண்பது மிகவும் கடினம். தேவர்கள் கூட இந்த என் வடிவத்தைக் காண எப்போதும் விழைகின்றனர்.

53. வேதங்களைக் கற்பதாலோ, கடுமையான தவத்தாலோ, தர்மங்கள் செய்வதாலோ, வேறு சடங்குகள் செய்வதாலோ நீ பார்த்துக் கொண்டிருக்கும் இந்த விதமான என் தோற்றத்தைக் காண முடியாது.

54. ஆனால், பரந்தபா! (எதிரிகளை வெல்பவனே)! வேறு எதிலும் நாட்டமில்லாத, மனம் ஒருமித்த பக்தியால் என்னுடைய இந்த வடிவத்தை அறிய முடியும், காண முடியும், இதற்குள் நுழையவும் முடியும்.

55. ஆயினும், பாண்டவனே! என்னையே அடைய வேண்டிய உயர்ந்த நோக்கமாகக் கருதி, என் பொருட்டே தன் கர்மங்களைச் செய்தபடி, பலன்களில் பற்றை விட்டு, எந்த உயிரிடமும் விரோதம் பாராட்டாமல் இருப்பவன் என்னை அடைவான்.  

12ஆவது அத்தியாயம்