Saturday, September 5, 2020

6. ஐந்தாவது அத்தியாயம் - செயலும் துறத்தலும்

1. அர்ஜுனன் கூறினான்:
கிருஷ்ணா! முதலில் நீ செயலைத் துறப்பதின் பெருமையைக் கூறினாய். பிறகு, யோகநிலையில் செயல் புரிய வேண்டும் என்று கூறினாய். இரண்டில் எது சிறந்தது என்று தெளிவாகச் சொல்வாயா?

2. பகவான் கூறினார்:
2. செயலைத் துறத்தல், யோகநிலையில் செயல்படுதல் ஆகிய இரண்டுமே ஒருவனை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும். இவை இரண்டில், செயலைத் துறப்பதை விட, யோகநிலையில் செயல்படுவதே சிறப்பானது.

3. விருப்பு, வெறுப்பு இல்லாதவன்தான் எப்போதும் துறவு நிலையில் இருப்பான். ஏனெனில், எதிரெதிர் துருவங்களிலிருந்து விலகி இருப்பவன்தான் தளைகளிலிருந்து விடுபட்டிருப்பான்.

4. அறியாதவர்கள்தான் ஞானயோகம் (அதாவது  செயல்களின் பலனைத் துறத்தல்), கர்மயோகம் (அதாவது கடமையைச் செய்தல்) ஆகிய இரண்டும் வெவ்வேறு என்று  கூறுவார்கள். அறிந்தவர்கள் அப்படிக் கருத மாட்டார்கள். இவை இரண்டில் ஏதாவது ஒன்றில் உறுதியாக இருப்பவன் இரண்டின் பலனையும் பெறுகிறான்.

5. ஞானயோகி அடையும் இடத்தை பக்தியோகியும் அடைகிறான். ஞானம், கடமையைச் செய்தல் இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பவன் சரியான பார்வையைக் கொண்டவன்.

6. ஆனால் அர்ஜுனா, யோகநிலை அடையாமல் செயலைத் துறக்க முயல்பவன் வருத்தத்தை அனுபவிப்பான். யோகத்தில் நிலைபெற்ற முனிதான் பிரம்மத்தை அடைகிறான்.

7. யோகத்தில் (பலனை எதிர்பாராத செயலில்) நிலைபெற்று, தூய்மையான மனம் கொண்டு, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறமை கைவரப் பெற்றவனாக, தன் புலன்களை வென்று, தனக்குள் இருக்கும்  ஆத்மாவை உணர்ந்து, மற்றவர்களின் ஆத்மாவையும் உணர்ந்தவன் செயல்களில் ஈடுபட்டாலும், அதனால் அவன் களங்கமடைவதில்லை.

8. பார்க்கும்போதும், கேட்கும்போதும், தொடும்போதும், நுகரும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், தூங்கும்போதும், மூச்சு விடும்போதும் "நான் எதையும் செய்யவில்லை" என்பதுதான் உண்மையை உணர்ந்து சமநிலை அடைந்த மனம் உள்ளவனின் எண்ணமாக இருக்கும்.

9. விதிக்கப்பட்ட செயல்களைப் புரிபவன், புலன்களால் நுகரப்படும் செயல்களைப் புரிபவை புலன்கள்தான் என்ற உண்மையை அறிந்தவன், தான் எதையும் செய்வதாக அவன் எப்போதும் நினைப்பதில்லை - பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், உண்ணுதல், நகர்தல், உறங்குதல், மூச்சு விடுதல், பேசுதல், மலம் கழித்தல், புரிந்து கொள்ளுதல் போன்ற செயல்களை, தன் ஈடுபாடு இல்லாமலே கண்களை இமைப்பது போல் அவன் புரியும்போதும்.

10. தன் எல்லாச் செயல்களையும் பற்றில்லாமல் செய்து, அவற்றின் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் ஒருவன், தாமரை இலை நீரில் படாமல் இருப்பது போல் பாவத்தால் பாதிக்கப்படாமல் இருப்பான்.

11. யோகிகள் பற்றை விட்டு விட்டு, உடல், மனம், அறிவு மற்றும் புலன்களால் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கான செயல்களை மட்டுமே செய்கிறார்கள்

12. யோகநிலை அடைந்தவன் தன் செயல்களின் பலன்களைத் துறந்தவனாக நிலையான அமைதியை அடைகிறான். ஆனால் யோகத்தில் நிலை பெறாதவன் தான் செய்யும் செயல்களுக்கான பலன்களில் பற்று வைத்து (அவற்றால்) கட்டுண்டவனாகிறான்.

13. மனதளவில் எல்லாச் செயல்களையும் கைவிட்டு, தன்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டு இருப்பவன் தான் எதையும் செய்கிறோம் அல்லது (உடலையோ, புலன்களையோ) செயல்பட வைக்கிறோம் என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு ஒன்பது வாசல்கள் கொண்ட ஊரில் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

14. உலகத்தின் செயல்களையோ, செய்விப்பவரையோ இந்த உடலுக்குரியவர் (ஆத்மா அல்லது பேருணர்வு) உருவாக்கவில்லை. செயல்களுக்கும் அவற்றின் பலன்களுக்குமான தொடர்பையும் அவர் உருவாக்கவில்லை. இவை ஒருவனின் இயல்பான குணங்களால் விளைகின்றன.

15. பேருணர்வு (ஆத்மா) ஒருவரின் நல்ல செயல்களுக்கோ, பாவச் செயல்களுக்கோ பொறுப்பேற்காது. உண்மையான அறிவு அறியாமையால் சூழப்பட்டிருக்கிறது. எனவே ஜீவர்கள் மாயையில் மூழ்கியிருக்கிறார்கள்.

16. சூரிய ஒளி உலகில் உள்ள பொருட்களைக் காட்டுவது போல், தன்னைப் பற்றிய அறிவினால் இந்த அறியாமை அழிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆத்மா புலப்படும். அவர்கள் இந்த உலகத்தை வெற்றி கொள்வார்கள்.

17. சிந்தனை மூலம் மாயையிலிருந்து விடுபட்டவர்களும், ஆத்மஞானம் பெற்றவர்களும், உள்ளிருக்கும் ஆத்மாவைக் குறித்துச் சிந்திப்பவர்களும், நம்பிக்கையில் நிலையாக இருப்பவர்களும், இறுதியான உண்மையிடம் முழுவதும் சரணடைந்தவர்களும் இவ்வுலக வாழ்வின் தளைகளிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

18.  வேதம் கற்ற, பணிவுள்ள அந்தணன், பசு, யானை, நாய், கீழ்நிலையில் உள்ள பிராணி இவர்கள் அனைவருக்குள்ளும் இறைவன் சமமான நிலையில் இருப்பதை உணரும் ஒருவன்தான் உண்மையான அறிவு பெற்றவன்.

19. தங்கள் மனத்தைச் சமநிலையில் வைத்திருப்பவர்கள் இந்தப் பிறவியிலேயே இவ்வுலகை வெற்றி கொள்வர். அவர்கள் குற்றங்கள் நீங்கியவர்களாக பிரம்மத்தின் சமநிலையை அறிந்திருப்பதால் அவர்கள் பிரம்மத்தில் நிலைத்திருக்கிறார்கள்.

20. பிரம்மத்தில் முழுமையாக நிலை பெற்று, நிலையான அறிவு பெற்று, மாயைகளிலிருந்து முழுவதும் விடுபட்டு, பிரம்மஞானியாக இருப்பவன் இனிமையான விஷயங்கள் கிடைப்பதால் குதூகலிக்கவும் மாட்டான், கசப்பான விஷயங்கள் கிடைப்பதால் வருந்தவும் மாட்டான்.

21. புலன்களால் துய்க்கப்படும் பொருட்களில் மனதைச் செலுத்தாதவன் ஆத்மசுகத்தை அனுபவிப்பான். தன் உணர்வறிவை பரந்த அறிவான பிரம்மத்துடன் யோகத்தால் இணைப்பவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிப்பான்.

22. குந்தியின் மைந்தனே! புலன்களுக்கு இன்பமளிக்கும் பொருட்களின் தொடர்பால் கிடைக்கும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணமாக அமைகின்றன. அவை நிச்சயம் நிலையற்றவை. அவற்றுக்கு ஒரு துவக்கமும் ஒரு முடிவும் உண்டு. ஆத்மஞானம் பெற்றவன், அறிவாளியாக இருப்பவன் அவற்றில் ஈடுபட மாட்டான்.

23. இந்தப் பிறவியிலேயே இந்த உடல் அழிவதற்கு முன் ஆசை, கோபம் இவற்றினால் எழும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிந்தவன் யோக நிலையடைந்து மகிழ்ச்சியாக வாழ்வான்.

24. மனத்தை ஆத்மாவில் இருத்தி உள்ளுக்குள் இருக்கும் ஒளியைக் காண்பவன், அத்தகைய ஆனந்தத்தை அனுபவிப்பவன், பிரம்மத்தை உணர்ந்து ஆத்ம விடுதலை பெற்றவன் ஆகிறான்.

25. சந்தேகங்களினால் எழும் இரட்டை நிலைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, மனத்தை உள்ளிருத்தி, மற்ற எல்லா உயிர்களின் நலன்களுக்காக எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கும், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டிருக்கும் மனிதர்கள் பிரம்மத்தில் நிலை பெற்றவர்களாக இருப்பார்கள்.

26. கோபத்திலிருந்து விடுபட்டு, உலகப் பொருட்களின் மீது ஆசை இல்லாதவர்களாக, தன்னை உணர்ந்து, சுயக்கட்டுப்பாட்டுடனும், எப்போதும் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ள முயன்றபடியும் இருப்பவர்கள் விரைவிலேயே  விடுதலை பெற்று பிரம்மத்தை அடைவார்கள்.

27, 28. புலன்களுக்கு இன்பமளிக்கும் தேவையற்ற பொருட்களைத் தன் மனத்திலிருந்து அப்புறப்படுத்தி, கண்களை இமைகளுக்கு நடுவில் இருக்கும் புள்ளியில் நிலை நிறுத்தி, உள்ளிழுக்கும் மூச்சையும், வெளிவிடும் மூச்சையும் கட்டுப்படுத்திச் சமன் செய்பவன், மனம், புலன்கள், அறிவு இவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்று, விடுதலை பெறுவதில் ஈடுபாடு கொண்டவனாகி, ஆசைகள், பயம், கோபம் இவற்றை விட்டு, எப்போதுமே விடுதலை பெற்ற நிலையை அடைகிறான்.

29. எல்லா யாகங்களிலும், தவங்களிலும் அளிக்கப்படுபவற்றைப் பெறுபவனாகவும், எல்லா உலகங்களுக்கும் அதிபதியாகவும், எல்லா உயிர்களுக்கும் நண்பனாகவும், நலன் விரும்பியாகவும் விளங்குபவன் நானே என்று அறிபவன் அமைதியை அடைகிறான்.