Friday, November 20, 2020

11. 10 ஆவது அத்தியாயம் - பிரம்மத்தின் பெருமைகள்

1. பகவான் கூறினார்:
வலுவான கரங்களை உடையவனே! எனக்குப் பிரியமானவானான உனக்கு நன்மை பயப்பதற்காக நான் கூறப்போகும் உயர்வான வார்த்தைகளை மீண்டும் கேள். 

2. என்னுடைய பெருமையை தேவர்களோ, முனிவர்களோ கூட அறிய மாட்டார்கள். எல்லா வகைகளிலும், தேவதைகள் மற்றும் மாமுனிவர்களின் மூலம் நான்தான்.

3. என்னைப் பிறப்பற்றவனாக, துவக்கம் இல்லாதவனாக, எல்லா உலகங்களுக்கும் இறைவனாக எவனொருவன் அறிகிறானோ, அவன் மனிதர்களுக்குள் அறியாமையற்றவனாகவும், எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கியவனாகவும் இருக்கிறான். 

4, 5. புத்திக் கூர்மை, அறிவு (கல்வியறிவு), அறியாமை மற்றும் மாயையிலிருந்து விடுபடுதல், கருணை, உண்மை, சுயக் கட்டுப்பாடு, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அச்சம், துணிவு, அஹிம்சை, மனதைச் சமநிலையில் வைத்திருத்தல், திருப்தி அடைதல், தவம், தர்மம், புகழ், அவமானம் என்று பல மாறுபட்ட தன்மைகளும் என்னிடமிருந்து பிறந்தவைதான்.

6. சப்த ரிஷிகள் (அகஸ்தியர், அத்ரி, பரத்வாஜர், கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர், விஸ்வாமித்ரர் என்ற ஏழு உயர்ந்த முனிவர்கள்) அவர்களுக்கு முன்பு வந்த நான்கு மனுக்கள் (ஸ்வயம்புவர், ஸ்வரோசிதர், ரைவதர், உத்தமர்) ஆகியோர் என் மனதிலிருந்து தோன்றியவர்கள்தான். இந்த உலகில் உள்ள மக்கள் எல்லாம் அவர்களின் வழித்தோன்றல்கள்தான். 

7. என்னுடைய மேன்மையையும், யோக சக்தியையும் அறிந்தவன் மனத்தை அலைய விடாமல் பக்தியில் நிலைத்திருப்பான். இதில் எந்த ஐயமும் இல்லை.

8. எல்லாவற்றுக்கும் மூலமான சக்தி நான்தான். என்னிடமிருந்துதான் எல்லாம் உருவாகின்றன. இந்த ஞானத்தைப் பெற்றவர்கள் ஒருமித்த சிந்தனையுடன் என்னை வணங்குகிறார்கள்.

9. தங்கள் மனத்தை முழுவதும் என்னிடம் நிலை பெறச் செய்தவர்களாக, தங்கள் வாழ்க்கையை எனக்கு அர்ப்பணித்தவர்களாக, என்னைப் பற்றிய அறிவைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டவர்களாக, என்னைப் பற்றிய விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டு அவர்கள் திருப்தியுடனும், மகிழ்ச்சியடனும் இருக்கிறார்கள்.

10. எப்போதும் என்னிடம் அன்புடன் பக்தி செலுத்தி வருபவர்களுக்கு, அவர்கள் என்னிடம் வருவதற்கான உண்மையான ஞானத்தை நான் கொடுக்கிறேன்.

11. அவர்களிடம் கருணை கொண்டு அறியாமையால் அவர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் இருளை அவர்கள் மனதில் ஒளி விடும் ஞான விளக்கின் மூலம் நான் போக்குகிறேன்.

12, 13. அர்ஜுனன் கூறினான்:
நீதான் உயர்ந்த பிரம்மம், உயர்ந்த இடம், தூய்மையானவன், உயர்ந்த புருஷன், நிரந்தரமானவன், அனைத்தையும் கடந்து நிற்பவன், ஆதியான தெய்வம், பிறவியற்றவன் எங்கும் நிறைந்திருப்பவன் என்றெல்லாம் உயர்ந்த முனிவர்களான நாரதர், அசிதர், தேவலர், வியாசர் ஆகியோர் உன்னைப் பற்றிக் கூறுகிறார்கள்.  இப்போது நீயே இவ்வாறு என்னிடம் கூறுகிறாய்.

14. கேசவா! நீ சொன்ன இவை அனைத்தையும் உண்மையென்று நான் ஏற்றுக் கொள்கிறேன். பகவானே, உன் தெய்வீக மஹாத்மியத்தை தேவர்களோ, தானவர்களோ (அரக்கர்கள்) அறியமாட்டார்கள்.

15. புருஷோத்தமா! எல்லாவற்றுக்கும் மூலமானவனே! எல்லாவற்றுக்கும் இறைவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! உலகத்தின் நாயகனே! நீ மட்டுமே உன்னை அறிவாய்.

16. நீ எல்லா உலகங்களுக்குள்ளும் பரவி அவற்றில் இருந்து கொண்டிருப்பதற்கு அடிப்படையாக விளங்கும் உன் தெய்வீக சக்திகளைப் பற்றி எனக்கு விரிவாகக் கூறு.

17. ஓ, உயர்ந்த யோகியே! எப்போதும் உன்னை தியானிப்பதன் மூலம் உன்னை நான் அறிவது எப்படி? பகவானே! எந்தெந்த வடிவங்களில் எல்லாம் உன்னை நான் தியானிக்க வேண்டும்? 

18. ஓ, ஜனார்த்தனா! உன்னுடைய யோக நிலை பற்றியும், உயர்வுகளைப் பற்றியும் மீண்டும் எனக்கு விவரமாகச் சொல். இந்த அமிர்தத்தை எவ்வளவு பருகினாலும் எனக்குத் திருப்தி ஏற்படாது.

19. பகவான் கூறினார்:
குரு வம்சத்தினருள் சிறந்தவனே! என் நிலைகளுக்கு எல்லையே இல்லை என்பதால், முக்கியமானதான என் தெய்வீக நிலைகள் பற்றி மட்டும் உனக்கு விளக்குகிறேன்.

20. குடகேசா (தூக்கத்தை வென்றவனே)! படைப்பின் எல்லாக் கூறுகளுக்குள்ளும் இருக்கும் ஆத்மா நான்தான். படைக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் துவக்கம் நான், அவற்றின் இடையில் இருப்பவன் நான், முடிவில் இருப்பவனும் நான்தான்.

21. ஆதித்யர்களுக்குள் நான் விஷ்ணு, ஒளி படைத்தவர்களுக்குள் நான் சூரியன், மருத்களுக்குள் (வாயு வடிவத்தில் உள்ளவை), நான் மரீசி, நட்சத்திரங்களுக்குள் நான் சந்திரன்.

22. வேதங்களுக்குள் நான் சாமவேதம், தேவர்களுக்குள் நான் வாசவன் (இந்திரன்), புலன்களுக்குள் நான் மனம், படைப்புகளுக்குள் நான் அறிவு.

23. ருத்ரர்களுக்குள் நான் சிவன், யக்ஷர்கள் மற்றும் அரக்கர்களுக்குள் நான் குபேரன், வசுக்களுக்குள் நான் அக்னி, மலைகளுக்குள் நான் மேரு.

24. பார்த்தா! புரோஹிதர்களுக்குள் நான் பிரஹஸ்பதி என்று அறிந்து கொள். படைத் தலைவர்களுக்குள் நான் ஸ்கந்தன், நீர்நிலைகளுக்குள் நான் சமுத்திரம்.

25. முனிவர்களுக்குள் நான் பிருகு. ஒலிகளுக்குள் நான் அனைத்தையும் கடந்து நிற்கும் ஓம் என்ற பிரணவ ஒலி. யாகங்களில் ஜபிக்கப்படும் இறை நாமம் நான் என்று அறிந்து கொள். அசையாப் பொருட்களுக்குள் நான் இமயமலை.

26. மரங்களுக்குள் நான் அரச மரம். தேவரிஷிகளுக்குள் நான் நாரதர், கந்தர்வர்களுக்குள் நான் சித்ரரதன், சித்தர்களுக்குள் நான் கபில முனி.

27. குதிரைகளுக்குள், பாற்கடலைக் கடந்தபோது வெளிப்பட்ட உச்சஸ்ரவஸ் நான் என்று அறிவாயாக. அரச யானைகளுக்குள், நான் ஐராவதம், மனிதர்களுக்குள் நான் அரசன்.

28. ஆயுதங்களுக்குள் நான் வஜ்ராயுதம், பசுக்களுக்குள் நான் காமதேனு, படைப்புக்குக் காரணமானவர்களில், நான் காமதேவன், பாம்புகளில் நான் வாசுகி.

29. நாகர்களில் நான் அனந்தன், நீர்தேவதைகளில் நான் வருணன், பித்ருக்களுக்குள் நான் அர்யமா. தர்மத்தை நிலைநிறுத்துபவர்களில் நான் யமதர்மன்.

30. அசுரர்களுக்குள் நான் பிரஹ்லாதன்,கட்டுப்படுத்துபவைகளுக்குள் நான் காலம், மிருகங்களுக்குள் நான் சிங்கம் என்றும், பறவைகளுக்குள் நான் கருடன் என்றும் அறிவாயாக.

31. தூய்மைப்படுத்துபவற்றுக்குள் (அல்லது வேகமானவற்றுள் - பவனஹ என்ற வடமொழிச் சொல்லுக்கு இந்த இரு பொருட்களும் உண்டு) நான் காற்று, ஆயுதம் ஏந்துபவர்களுக்குள் நான் ராமன், நீர்ப் பிராணிகளில் நான் முதலை, நதிகளுக்குள் நான் கங்கை.

32. ஓ, அர்ஜுனா! எல்லாப் படைப்புகளுக்கும் துவக்கம், நடு, முடிவு எல்லாமே நான் என்று அறிவாயாக. ஞானங்களுக்குள் நான் ஆத்மஞானம், வாதங்களில் நான் முடிவான வாதம்.

33. எழுத்துக்களில் அகரம் நானே, இலக்கணச் சேர்க்கைகளில் நான் இரட்டை (வடமொழியில் ஒரு கூட்டுச் சொல் வடிவம்),முடிவற்ற காலம் நானே. படைப்பவர்களுக்குள் நான் பிரம்மா.

34. எல்லாவற்றையும் விழுங்கும் மரணம் நான்தான், நிகழப்போகும் செயல்களை உருவாக்குபவனும் நான்தான். பெண்களுக்குள் நான் புகழ், செல்வம், சிறப்பான பேச்சு, ஞாபகம், அறிவுக் கூர்மை, உறுதியான நிலைப்பாடு மற்றும் பொறுமை.

35. சாம வேதத்தில் நான் பிருஹத் சாமம், சந்தங்களில் நான் காயத்ரி, மாதங்களில் நான் மார்கழி, காலங்களில் நான் வசந்தம்.

36. ஏமாற்றுபவர்களில் நான் சூதாட்டக்காரன், ஒளி விடுபவற்றின் ஒளி நான், வெற்றி நான், சாகசம் நான், வலுவானவர்களின் (வலுவானவற்றின்) வலிமை நான்.

37. விருஷ்ணிகளில் (விருஷ்ணியின் வம்சத்தினரில்) நான் வாசுதேவன் (கிருஷ்ணன்), பாண்டவர்களில் நான் தனஞ்ஜயன் (அர்ஜுனன்), முனிவர்களில் நான் வியாசர், கவிஞர்களில் நான் உசனர் (அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியர்)

38. தண்டிப்பவற்றுள் நான் தர்மத்தின் தடி. வெற்றி பெற விரும்பவர்களின் உத்தி நான். ரகசியங்களில் நான் மௌனம். அறிவுள்ளவர்களின் அறிவு நான்.

39. அர்ஜுனா! எல்லாப் படைப்புகளுக்கும் மூலமானவன் நானே, அசையும் மற்றும் அசையாத பொருட்களிலோ, உயிர்களிலோ நான் இல்லாதது எதுவும் இல்லை.

40. பரந்தபா (எதிரிகளை வெல்பவனே)! என் தெய்வீக மஹிமைகளுக்கு எல்லையே இல்லை. நான் இதுவரை கூறியவை என் அளவற்ற சக்திகளுக்கான சில உதாரணங்கள்தான்.

41. உண்மை, அழகு, சக்தி இவற்றிலிருந்து உருவான எந்த ஒரு படைப்பும் என் பிரகாசத்திலிருந்து உருவானது என்று அறிவாயாக.

42. ஆனால் இத்தனை விவரங்கள் உனக்கு எதற்கு? இந்த அண்டங்கள் அனைத்தையும் என் சிறு பகுதியால் வியாபித்து அவற்றை நான் தாங்குகிறேன்.

அத்தியாயம் 11

Friday, November 6, 2020

10. 9ஆவது அத்தியாயம் - அழிவற்ற பிரம்மம்

1. பகவான் கூறினார்:
என்னிடம் பொறாமை கொள்ளாதவனான உனக்கு மிகவும் ரகசியமான விஷயத்தையும் விவேகத்தையும் அளிக்கிறேன். இதை அறிந்து கொண்டால் இந்த உலக வாழ்க்கையின் துயரத்திலிருந்து நீ விடுபடுவாய்.

2. அறியப்படுபவற்றுக்கெல்லாம் தலையாயதான இந்த அறிவு ரகசியங்களுக்கெல்லாம் தலையாய ரகசியம், தலைசிறந்த தர்மம், நேரடியாக உணரக் கூடியது, தூய்மைப்படுத்துவது, கடைப்பிடிப்பதற்கு ஆனந்தமானது, என்றும் நிலைத்திருப்பது.   

3. எதிரிகளை வெல்பவனே! இந்த தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்னை அடையாமல் பிறப்பு இறப்பு என்னும் இந்த உலகப் பாதைக்குத் திரும்ப வருகிறார்கள்.

4. எல்லா உலகங்களும் என் வடிவற்ற தன்மையால் ஊடுருவப்பட்டிருக்கின்றன. எல்லாப் படைப்புகளும் எனக்குள் இருக்கின்றன, ஆனால் நான் அவற்றுக்குள் இல்லை.

5. ஆயினும் எல்லாப் படைப்புகளும் என்னிடத்தில் வசிக்கவில்லை. என் அசாதாராணமான யோக நிலையைப் பார். எல்லாப் படைப்புகளையும் நான் தாங்கி நிற்கிறேன், ஆயினும் நான் அவற்றுக்குள் இல்லை!

6. எல்லா இடத்திலும் வீசிக் கொண்டிருக்கும் காற்று எப்போதும் வெளியில் இருப்பது போல், எல்லாப் படைப்புகளும் எனக்குள் இருக்கின்றன.

7. ஓ, குந்தி மைந்தனே! ஒவ்வொரு கல்பத்தின் (நான்கு யுகங்கள் கொண்டது ஒரு கல்பம்) முடிவிலும் எல்லாப் படைப்புகளும் எனக்குள் ஒடுங்குகின்றன. ஒவ்வொரு கல்பத்தின் துவக்கத்திலும் அவற்றை நான் மீண்டும் படைக்கிறேன்.

8. என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள என் இயல்பின்படி, இந்தக் கணக்கற்ற படைப்புகளை அவர்களின் / அவற்றின் இயல்புக்கேற்ப நான் மீண்டும் மீண்டும் படைக்கிறேன்.

9. ஓ. தனஞ்சயா! எனக்கு எந்தப் பற்றும், விருப்பமும் இல்லாததால், என்னுடைய இந்தச் செயல்கள் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. 

10. அசையும் மற்றும் அசையாப் பொருட்களை இயற்கை என்னுடைய கட்டுப்பாட்டில் உருவாக்குகிறது. இதனால்தான் படைப்புச் சுழற்சி (பிறப்பு இறப்புச் சுழற்சி) நிகழ்கிறது.

11. நான் மனித உருவெடுத்து உலகில் அவதரிக்கும்போது, மூடர்கள் என்னை நிந்திக்கிறார்கள். நான் எல்லாப் படைப்புகளுக்கும் இறைவன் என்பதையும், நான் அனைத்துக்கும் மேலானவன் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.

12. அடைய முடியாத ஆசைகளுடனும், பயன் தராத செயல்களுடனும், மாயையான அறிவுடனும் இந்த மனம் குழம்பிய மூடர்கள் அசுரர்கள் மற்றும் தீயவர்களின் இயல்பை மேற்கொள்கிறார்கள்.

13.ஆனால் பார்த்தா! தெய்வத்திடம் சரணடைந்த உயர்ந்த ஆத்மாக்கள் என்னை நிலையான மேலான சக்தி என்று உணர்ந்து மனத்தை வேறெங்கும் அலைய விடாமல் என்னிடம் பக்தி செலுத்துகிறார்கள்.

14. என் பக்தர்கள் எப்போதும் என் புகழைப் பாடிக்கொண்டு, உறுதியான மனத்துடனும், பணிவுடனும் என்னை எப்போதும் வணங்குகிறார்கள்.

15. மற்றவர்கள் என்னை ஞானமார்க்கத்தைப் பின்பற்றியோ, ஒன்றாகவோ, பலவாகவோ, அண்ட சராசரங்களின் வடிவாகவோ கருதி வணங்குகிறார்கள்.

16. யாகங்களில் செய்யப்படும் கர்மம் நான்தான். யாகம் நான்தான், யாகங்களில் படைக்கப்படும் பொருள் நான்தான், மருந்து நான்தான், மந்திரம் நான்தான், யாகத்தீயில் ஊற்றப்படும் நெய் நான்தான், யாகத்தீயும் நான்தான், யாகத்தீயில் அர்ப்பணிக்கப்படும் பொருளும் நான்தான்.

17. இந்த உலகத்தின் தந்தை நான்தான், தாயும் நான்தான், உலகத்தை ஆதரிப்பவன் நான்தான், உலகத்தின் மூதாதையரும் நான்தான், அறியப்பட வேண்டியவன் நான்தான், புனிதமான ஓம் என்ற மந்திரமும் நான்தான், ரிக் வேதம் நான்தான், யஜூர்வேதம் நான்தான், சாமவேதமும் நான்தான்.

18. அடையப்பட வேண்டிய இலக்கு நான், காப்பவன் நான், எஜமானன் நான், சாட்சி நான், வசிக்குமிடம் நான், அடைக்கலம் நான், மிக நெருக்கமான நண்பன் நான், படைப்பு நான், அழிவு நான், அமருமிடம் நான், காரணம் நான், அழிவற்ற விதை நான்.

19. அர்ஜுனா! வெப்பத்தைக் கொடுப்பவன் நான். மழையைக் கொடுப்பவனும், நிறுத்தி வைப்பவனும் நான். மரணமற்ற தன்மை நான், மரணம் நான். இருப்பவை எல்லாம் நான், இல்லாதவை அனைத்தும் நான்.

20. மூன்று வேதங்களையும் அறிந்தவர்கள், சோம பானம் அருந்தியவர்கள், பாவங்களிலிருந்து விடுபட்டவர்கள் ஆகியோர் யாகங்களின் மூலம் என்னை வணங்கி சொர்க்கத்தை வேண்டுகிறார்கள். தங்கள் புண்ணியத்தால் அவர்கள் இந்திர லோகத்தை அடைந்து அங்கே சொர்க்கலோகத்தின் இன்பங்களைத் துய்க்கிறார்கள். 

21. சொர்க்க லோகத்தின் இன்பங்களை அனுபவித்த பிறகு, தங்கள் புண்ணியங்கள் தீர்ந்ததும் அவர்கள் மீண்டும் இந்த உலகில் வந்து பிறக்கிறார்கள். இவ்வாறு மூன்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றி, புலன் இன்பங்களை விரும்பியவர்களாக அவர்கள் இந்த உலகுக்கும் சொர்க்க லோகத்துக்கும் இடையே வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

22. என்னைத் தவிர வேறு எந்த சிந்தனையுமின்றி, என்னுடன் நிரந்தரமாக இருக்க விருப்பம் கொண்டு என்னிடம் பக்தி செலுத்துபவர்களுக்கு நான் உயர்ந்த நன்மையை வழங்குகிறேன்.

23. குந்தியின் மைந்தனே! வேறு தெய்வங்களை வணங்குபவர்கள் கூட, அவர்கள் தவறான விதத்தில் வழிபடுகிறார்கள் என்றாலும், என்னைத்தான் வணங்குகிறார்கள்,  

24. எல்லா யாகங்களிலும் அர்ப்பணிக்கப்படும் பொருட்களைப் பெறுபவன் நானே, எல்லா யாகங்களுக்கும் அதிபர் நானே. என்னை உண்மையாக அறியாதவர்கள் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் விழுகிறார்கள்.

25. தேவதைகளை வணங்குபவர்கள் தேவதைகளிடம் செல்வர், பித்ருக்களை முன்னோர்களை) வணங்குபவர்கள் பித்ருக்களிடம் செல்வர், ஆவிகளை வணங்குபவர்கள் ஆவிகளிடம் செல்வர், என்னை வணங்குபவர்கள் நிச்சயம் என்னை வந்தடைவர்.

26. பக்தியுடன் எனக்கு அர்ப்பணிக்கப்படும் இலை, பூ, பழம், நீர் எதையும், அந்தத் தூய உள்ளம் கொண்ட ஆத்மாவிடமிருந்து நான் ஏற்றுக் கொள்வேன்.

27. குந்தியின் மைந்தனே! நீ எதைச் செய்தாலும், எதை உண்டாலும், யாகப் பொருளாக எதை வழங்கினாலும், எதை தானம் செய்தாலும், அதை எனக்கு அர்ப்பணித்து விடு.

28. இவ்விதமாக உன் நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவுகளிலிருந்து நீ விடுபடுவாய். இத்தகைய துறவு மனநிலையைக் (சந்நியாச யோகம்) கடைப்பிடிப்பதால் நீ விடுதலை அடைந்தவனாக என்னை வந்தடைவாய்.

29. நான் எல்லாவற்றிலும் ஒரே விதமாக நிறைந்திருக்கிறேன். எனக்கு யாரிடமும் வெறுப்புமில்லை, விருப்புமில்லை. பக்தியுடன் என்னை வணங்குபவர்களிடத்தில் நான் இருக்கிறேன், அவர்கள் என்னிடம் இருக்கிறார்கள்.

30. ஒருவன் மிகவும் கொடிய செயல்களைச் செய்தாலும், அவன் மனதை வேறெங்கும் செலுத்தாமல் என்னிடம் மட்டும் பக்தி செலுத்துபவனாக இருந்தால், அவன் சரியாக நிலை பெற்றிருப்பதால் அவன் உயர்ந்தவனாகவே (சாது என்றே) கருதப்பட வேண்டும்.

31. குந்தியின் மைந்தனே! அத்தகைய பக்தன் விரைவிலேயே அறத்தின் வழி நடப்பவனாகி, நிலையான அமைதியைப் பெறுகிறான். என் பக்தர்கள் எப்போதுமே அழிந்து போக மாட்டார்கள் என்பதை உணர்வாயாக.

32. ஓ, அர்ஜுனா! என்னிடம் சரணடைவதன் மூலம், பாவமான கருவின் முலம் பிறந்தவர்கள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் உயர்ந்த நிலையை அடைவர்.

33. என்னிடம் பக்தி செய்யும் அந்தணர்களும், க்ஷத்திரியர்களும் உயர்நிலையை அடைவார்கள் என்று தனியே கூற வேண்டியதில்லை. துன்பம் நிறைந்த, நிலையற்ற  இவ்வுலகில் பிறந்து விட்ட நீ என்னிடம் பக்தி செலுத்து.

34. எப்போதும் என்னையே நினைத்திரு, என் பக்தனாகி, என்னை வணங்கு. எனக்குள் முழுமையாக ஆழ்ந்திரு. நீ நிச்சயம் என்னை அடைவாய்.

அத்தியாயம் 10