Tuesday, December 29, 2020

14. 13ஆவது அத்தியாயம் - ஜீவாத்மாவும், பரமாத்மாவும்

1. அர்ஜுனன் கூறினான்:
ஓ, கேசவா! பிரகிருதி (இயற்கை, பொருள்), புருஷன் (ஆத்மா), க்ஷேத்ரம் (இடம்), க்ஷேத்ரக்ஞன் (உடலை அறிந்திருப்பவன்), ஞானம் (அறிவு), ஞேயம் (அறியப்படுவது) ஆகியவை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

2. பகவான் கூறினார்:
குந்தியின் மைந்தனே! இந்த உடல் க்ஷேத்ரம் என்றும், இந்த உடலை அறிபவன் க்ஷேத்ரக்ஞன் என்றும் இவற்றை அறிந்தவர்களால் (முனிவர்களால்) கூறப்பட்டுள்ளது.

3. பரத குலத் தோன்றலே! எல்லா க்ஷேத்ரங்களுக்கும் க்ஷேத்ரக்ஞன் நானே என்று அறிவாயாக. இந்த உடலையும், அதை அறிந்திருப்பவனையும் பற்றி  அறிந்திருப்பதுதான் ஞானம் என்பது என் கருத்து.

4. உடல், அதன் இயல்பு, அது அடையும் மாற்றங்கள், அவை எப்போதிலிருந்து ஏற்படுகின்றன, அதை அறிபவன் யார் அவனுடைய சக்திகள் என்ன என்பவை பற்றி நான் சுருக்கமாகக் கூறுவதைக் கேள்.

5. இந்த அறிவு முனிவர்களால் பல்வேறு பாடல்கள், வேத மந்திரங்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகியவை மூலம் வெவ்வேறு விதங்களில் காரணங்களுடன் ஆழமாக விளக்கப்பட்டிருக்கிறது.

6, 7. பஞ்ச பூதங்கள் (நிலம், நீர், வான், தீ, ஆகாயம் அல்லது வெற்றிடம்), அகங்காரம் (தான் என்னும் எண்ணம்), அறிவு, ஆத்மா, ஞானேந்தரியங்கள் (மெய், வாய் - சுவை, உணர்தல் கண், மூக்கு, செவி), கர்மேந்திரியங்கள் (வாய்- பேசுதல், கைகள், கால்கள், பிறப்புறுப்பு, ஆசனவாய்), ஞானேந்திரியமான மனம் என்ற 11 இந்திரியங்கள், புலன்களால் அறியப்படும் 5 பொருட்கள் (சுவை, ஒளி, உணர்வு, ஓசை, நாற்றம்), விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, துயரம், கட்டமைக்கப்பட்டுள்ள உடல், அறிதல் அல்லது உணர்தல், உறுதி இவற்றைக் கொண்டு க்ஷேத்திரம் என்ற இந்த உடல் அதன் மாறுபாடுகளுடன் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது.

8-12. பணிவு, செருக்கின்மை, அஹிம்சை, சகிப்புத்தன்மை, நேர்மை, குருவுக்கு சேவை செய்தல், தூய்மை, உறுதி, சுயக் கட்டுப்பாடு, வைராக்கியம் (புலனுக்கு இன்பம் அளிக்கும் பொருட்களில் பற்றின்றி இருத்தல்), அகங்காரமின்மை (தான் என்ற உணர்வின்றி இருத்தல்), பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் இவற்றால் விளையும் துயரம், வலி இவற்றை எப்போதும் உணர்ந்திருத்தல், பற்றில்லாமல் இருந்து கொண்டு, மனைவி, மக்கள், குடும்பம், மற்ற உறவுகளிடம் அதிக ஒட்டுதல் இன்றி, பிடித்த, பிடிக்காத நிகழ்வுகளைச் சமநிலையில் எதிர் கொண்டு கொண்டு, மனத்தை வேறு திசைகளில் செலுத்தாமல் என்னிடம் பக்தி செலுத்திக் கொண்டு, மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் தனிமையான இடங்களை விரும்பி அமைதியாக இருந்து கொண்டு, எப்போதும் ஆத்மாவைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்தபடி, ஆன்மீகம் பற்றிய அறிவிலும், உண்மையை விளக்கும் தத்துவங்களிலும் ஈடுபாடு கொண்டிருத்தல் இவை மட்டும்தான் அறிவு, மற்றவை அனைத்தும் அறியாமை.   

13. அறியப்பட வேண்டியது எது, எதை அறிந்தால் மரணமற்ற நிலை கிடைக்கும் என்பதை நான் இப்போது கூறுகிறேன். துவக்கமற்ற அது என்னை உயர்ந்த பொருளாகக் கொண்டது. இருப்பவை, இல்லாதவை இண்டுக்கும் அப்பாற்பட்ட அது பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது.

14. அதற்கு எல்லா இடங்களிலும் கைகளும், கால்களும் உண்டு. எங்கும் கண்கள், தலைகள், வாய்கள், காதுகள் கொண்டு, அது எல்லா இடங்களையும் வியாபித்தபடி இவ்வுலகில் இருக்கிறது.

15. அது எல்லாப் புலன்களுக்கும், எல்லா குணங்களுக்கும் மூலம், ஆயினும் அது புலன்கள் இல்லாதது. எதிலும் பற்றில்லாமல் இருக்கிறது, ஆயினும் அனைத்தையும் தாங்கி நிற்கிறது. குணங்கள் ஏதும் இல்லாமல் இருக்கிறது, ஆயினும் எல்லா குணங்களையும் அனுபவிப்பதாக இருக்கிறது.

16. அசையும் மற்றும் அசையாத எல்லாப் பொருட்களுக்கு உள்ளேயும், வெளியிலும் அது இருக்கிறது. அது நுணுக்கமானது என்பதால் அறிய முடியாததாக இருக்கிறது. அது வெகு தொலைவிலும், மிக அருகிலும் இருக்கிறது.

17. அது பிரிக்கப்பட முடியாதது, ஆனால் எல்லாப் பொருட்களுக்குள்ளும் பிரிந்திருக்கிறது, எல்லாவற்றையும் தாங்குகிறது, ஆயினும் எல்லாவற்றையும் தன்னுள் விழுங்குவது என்றும், எல்லாவற்றையும் படைப்பது என்றும் அறியப்படுகிறது.

18. ஒளி தரும் பொருட்களுக்கெல்லாம் ஒளியாக, இருளைக் கடந்ததாக அது இருக்கிறது. அது அறிவாகவும், அறியப்பட வேண்டியதாகவும், அறிவின் நோக்கமாகவும் இருக்கிறது. அது அனைவரின் இதயங்களுக்குள்ளும் உள்ளது.

19. இவ்வாறு க்ஷேத்ரம், அறிவு, அறியப்பட வேண்டியது ஆகியவை என்னால்  விவரிக்கப்பட்டுள்ளன. என்னிடம் பக்தி செலுத்துபவன் இதை அறிந்த பிறகு என் இயல்பை அடைவான்.

20. பிரகிருதி (பஞ்ச பூதங்களால் ஆன உலகம்), புருஷன் (ஆத்மா ) இருவருமே ஆரம்பம் இல்லாதவர்கள் என்று அறிவாயாக. எல்லா மாற்றங்களும் குணங்களும் பிரகிருதியிலிருந்தே உருவானவை.

21. செயல்களையும் அவற்றுக்கான காரணங்களையும் உருவாக்குவது பிரகிருதியின் பொறுப்பு என்றும், இன்ப துன்பங்களை அனுபவிப்பதை  உருவாக்குவது புருஷனின் பொறுப்பு என்றும் கூறப்பட்டிருக்கிறது.

22. பிரகிருதியில் (உடலில்) இருக்கும் புருஷன் பிரகிருதியால் உருவாக்கப்பட்ட மூன்று குணங்களையும் நிச்சயமாக அனுபவிக்கிறான். குணங்களுடனான தொடர்பு நல்ல பிறப்புகளுக்கும் தீய பிறப்புகளுக்கும் காரணமாகிறது.

23. உடலில் இருந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டும், கட்டுப்படுத்திக் கொண்டும், ஆதரித்துக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் இருக்கும் மகேஸ்வரான பரமாத்மா புருஷன் என்று அழைக்கப்படுகிறார்.

24. புருஷன், பிரகிருதி மற்றும் குணங்களை இவ்விதமாகப் புரிந்து கொண்டவன் எந்த நிலையில் இருந்தாலும் மீண்டும் பிறக்க மாட்டான்.

25. சிலர் புருஷனாகிற ஆத்மாவை தியானத்தால் அறிகிறார்கள். சிலர் தங்களுக்குள் இருக்கும் ஆத்மாவைத் தானே (உணர்ந்து) அறிகிறார்கள். சிலர் ஞான யோகத்தாலும்,  இன்னும் சிலர் கர்ம யோகத்தாலும் ஆத்மாவை அறிகிறார்கள்.

26. மற்றவர்கள் இந்த வழிகள் எதையும் அறியாமல் மற்றவர்களிடம் கேட்டதை வைத்து (என்னை) வணங்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் கூடக் கேள்வி ஞானத்தின் மூலமே மரணத்தை வெல்லும் நிலையை அடைகிறார்கள்.

27. பரத வம்சத்தவருள் சிறந்தவனே! இவ்வுலகில் தோன்றியது எதுவும், அது அசையும் பொருளாயிருந்தாலும், அசையாப் பொருளாயிருந்தாலும், அது க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞர் இரண்டும் இணைந்த தன்மை கொண்டதுதான் என்பதை அறிவாயாக.

28. எல்லாப் பொருட்களுக்குள்ளும் சமமாக வசித்து வரும் பரம்பொருளை அழிபவற்றுக்குள் இருக்கும் அழியாத பொருளாக எவன் பார்க்கிறனோ அவனே (உண்மையாக) பார்க்கிறான்.

29. எல்லா இடங்களிலும் சமமாக நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளை  எங்கும் சமமாகப் பார்ப்பவன் தன் ஆத்மாவைத் தாழ்த்துவதில்லை. அதன் விளைவாக அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

30, பிரகிருதி மட்டுமே எல்லாச் செயல்களையும் செய்வதாகவும், ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதாகவும் எவன் பார்க்கிறானோ, அவன் பார்க்கிறான்.

31.தனித்தனியான  பல்வேறு உயிர்களும்,பிற பொருள்களும் ஒரே பொருளில் நிலைபெற்று அதனிடமிருந்து விரிந்து பெருகுவதை ஒருவன் உணரும்போது அவன் பிரம்மத்தை அடைகிறான்.

32. குந்தியின் மைந்தனே!  ஆரம்பமும் முடிவும் இல்லாத, மாற்றமடையாத, குணங்கள் இல்லாத பரமாத்மா உடலில் இருந்தாலும், அது எதையும் செய்வதில்லை, எதனாலும் களங்கப்படுவதுமில்லை.

33. எல்லா இடத்திலும் இருக்கும் ஆகாயம் (இடம் -  space)) எப்படி எதனாலும் களங்கப்படுவதில்லையோ, அது போல் ஆத்மா உடலில் எல்லா இடத்திலும் இருந்தாலும் அது களங்கப்படுவதில்லை.

34. பரத வம்சத்திவனே! ஒரு சூரியன் இந்த உலகம் முழுமைக்கும் ஒளியூட்டுவது போல், க்ஷேதரக்ஞன் (ஆத்மா), க்ஷேத்ரம் (உடல்) முழுவதற்கும் ஒளியூட்டுகிறான்.

35. க்ஷேத்ரத்துக்கும் க்ஷேத்ரக்ஞனுக்கும் உள்ள வேறுபாட்டைத் தன் அறிவினால் (சிந்தனையால்) உணர்ந்து, இந்த பிரகிருதியிலிருந்து விடுதலை பெறும் முறையையும் அறிபவர்கள் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். 


No comments:

Post a Comment