1. அர்ஜுனன் கூறினான்:
உன்னையே (உன் வடிவத்தை) எப்போதும் வணங்குபவர்கள், உன் எல்லையற்ற, வடிவற்ற நிலையை வழிபடுபவர்கள் என்ற இரண்டு வகை பக்தர்களில் எந்த வகையினர் யோகப் பயிற்சியில் சிறந்தவர்கள்?
2. பகவான் கூறினார்:
என்னிடம் மனத்தைச் செலுத்தி, பக்தியுடனும், சிரத்தையுடனும் என்னை எப்போதும் வணங்குபவர்களே யோகத்தில் சிறந்து விளங்குபவர்களாக என்னால் கருதப்படுவார்கள்.
3, 4. ஆயினும், அழிவற்ற, வரையறுக்க முடியாத, எங்கும் நிறைந்திருக்கும், எண்ணங்களால் உணர முடியாத, மாறாத, அசைக்க முடியாத, நிலையான பரம்பொருளை, தங்கள் புலன்களை அடக்கி, எல்லா இடங்களிலும் சமநிலையில் இருந்து, எல்லோருக்கும் நன்மை செய்து கொண்டு வழிபடுபவர்களும் என்னிடம்தான் வருகிறார்கள்.
5. வடிவம் இல்லாத பரம்பொருளை வழிபடுவதில் மனத்தைச் செலுத்தி இருப்பவர்களுக்கு அது அதிகக் கடினமாக இருக்கும். உடலுடன் வாழ்பவர்களுக்கு (வடிவில்லாத) அந்த இலக்கை அடைவதில் முன்னேற்றம் காண்பது கடினமானது.
6, 7. ஆனால், எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணித்து, என்னிடம் ஈடுபாடு கொண்டு, வேறு சிந்தனையின்றி, பக்தி யோகத்தால் என்னையே தியானிப்பவர்களை இறப்பு என்னும் உலக வாழ்க்கைக் கடலிலிருந்து விரைவிலேயே மீட்பவனாக நான் இருப்பேன், பார்த்தா!
8. உன் மனத்தை என்னிடம் நிலை பெறச் செய்து உன் அறிவையும் என்னிடத்தில் செலுத்து. அதற்குப் பிறகு நீ என்னிடம் வசிப்பாய். இதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
9. தனஞ்சயா! உன் மனத்தை முழுமையாக என்னிடம் செலுத்த முடியாவிட்டால், பக்தி யோகத்தைப் பயிற்சி செய். இவ்விதமாக, என்னை அடைவதற்கான விருப்பத்தை உன்னால் வளர்த்துக் கொள்ள முடியும்.
10. உன்னால் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்ய முடியாவிட்டால், நீ செய்யும் செயல்களை என் பணியாகக் கருதி, அவற்றை எனக்கு அர்ப்பணித்துச் செயல்படு. எனக்காகப் பணி செய்வதால் நீ முழுமை அடைவாய்.
11. இதைச் செய்வது கூட உனக்கு இயலாவிட்டால்,உன் செயல்களின் பலன்கள் அனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து, உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு என்னைச் சரணடை.
12. பயிற்சியை விட ஞானம் நிச்சயம் உயர்ந்ததுதான். ஆனால் ஞானத்தை விட தியானம் உயர்ந்தது. செயல்களின் பலன்களைத் தியாகம் செய்வது தியானத்தை விட உயர்ந்தது. பலன்களைத் தியாகம் செய்வதால் அமைதி கிட்டும்.
13, 14. பொறாமை உணர்வு இன்றி, எல்லா உயிர்களிடமும் அன்பும், கருணையும் கொண்டு, எதையும் தனக்குச் சொந்தமென்று நினைக்காமல், அகங்காரம் இல்லாமல், இன்பத்திலும், துன்பத்திலும் சமநிலையிலும், பிறர் குற்றங்களைப் பொறுக்கும் மனநிலையுடனும், எப்போதும் திருப்தியுடனும் இருந்து கொண்டு, உறுதியான மனத்துடன் யோக நிலையில் இருந்து கொண்டு, தன் மனத்தையும், அறிவையும் என்னிடம் அர்ப்பணித்து இருக்கும் பக்தன் என்னால் விரும்பப்படுபவனாக இருப்பான்.
15. உலகுக்கு (மற்றவர்களிக்கு)த் தொந்தரவாக இல்லாமலும், உலகத்தால் (மற்றவர்களின் செயல்களால்) பாதிக்கப்படாமலும், மகிழ்ச்சி, கோபம், பயம், உத்வேகம் (அதீதமான உற்சாகம், கவலை, படபடப்பு போன்றவை) ஆகியவற்றிலிருந்து விடுபட்டும் இருப்பவன் எனக்கு விருப்பமானவன்.
16. எதிர்பார்ப்புகள் இல்லாதவனாக, தூய்மையானவனாக, திறமையுடன் செயல்படுபவனாக, கவலைகள் இல்லாதவனாக, துயரப்படாதவனாக, எல்லாச் செயல்களையும் எனக்கு அர்ப்பணிப்பவனாக இருக்கும் என் பக்தன் எனக்கு விருப்பமானவன்.
17. விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, சோகம் ஆகியவை இல்லாத, நன்மை-தீமை இரண்டையும் ஒன்றாகக் கருதும் பக்திமான் எனக்கு விருப்பமானவன்.
18, 19. நண்பனிடமும் எதிரியுடனும் சமமாக நடந்து கொண்டு, கௌரவம் அவமானம் இரண்டையும் ஒன்றாகக் கருதி, வெப்பம் - குளிர், சுகம் - துக்கம் இவற்றைச் சமநிலையில் எதிர்கொண்டு, எல்லாப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டு, புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதி, மௌனமாகவும் (அதிகம் பேசாமல்), திருப்தியுடனும், எந்த ஒரு இருப்பிடத்தையும் நிலையானதாகக் கருதாமல், உறுதியான சிந்தனையுடன் என்னிடம் பக்தியில் ஈடுபட்டிருப்பவன் எனக்கு விருப்பமானவன்.
20. உயர்ந்ததான தர்மத்தை விதிக்கப்பட்டுள்ளபடி பின்பற்றி, என்னை உயர்ந்த பரம்பொருளாக நினைத்து உறுதியுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எனக்கு மிகவும் விருப்பமானவன்.
No comments:
Post a Comment