Friday, April 17, 2015

2. முதல் அத்தியாயம் - அர்ஜுனனின் தடுமாற்றம்

(குருட்சேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் துவங்க இருக்கிறது. போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்பதை, துரியோதனனின் தந்தையான கண் பார்வையற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டியும், நண்பருமான சஞ்சயர் விவரிக்கிறார். 

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டறியும் சக்தியை சஞ்சயருக்கு வியாசர் அருளியிருந்தார். அதனால் அரண்மனையில் இருந்தபடியே போர்க்களத்தில் நடந்தவற்றைப் பார்க்கவும், அங்கே நடைபெற்ற உரையாடல்களைக் கேட்கவும் சஞ்சயரால் முடிந்தது. இதோ பகவத் கீதை துவங்குகிறது)

1. திருதராஷ்டிரர் வினவினார்:
சஞ்சயா! தர்மபூமியான குருட்சேத்திரத்தில், போர் புரியும் நோக்கத்துடன் கூடியிருக்கும் என் பிள்ளைகளும், பாண்டுவின் பிள்ளைகளும் (இப்போது) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

2. சஞ்சயர் கூறினார்:
தங்களுடன் போர் புரியத் தயாராக அணிவகுத்திருக்கும் பாண்டவ சேனையைக் கண்ணுற்ற இளவரசன் துரியோதனன் (துரோணரிடம்) சொன்னான்.

3. "துருபதனின் மைந்தனான உங்கள் மாணவன் திருஷ்டத்துய்மன் பாண்டவர்களின் பலம் பொருந்திய சேனையைப் போருக்கு ஆயத்தமாக அணிவகுத்திருப்பதைப் பார்த்தீர்களா குருதேவரே?

4. "இந்தச் சேனையில், பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான பலம் கொண்ட சாத்யகி, விராடர் போன்ற வீரர்களும், மகாரதியான (தேர்ப்படையை நடத்துவதில் வல்லவர்) துருபதனும் தங்கள் கைகளில் பெரும் விற்களை ஏந்தி நிற்கிறார்கள்.

5. மிகச் சிறந்த வீரர்களான திருஷ்டகேது, சேகிதானன், மாவீரரான காசி அரசர், புருஜித், குந்திபோஜன், சைப்யன் போன்ற சிறந்த வீரர்களும் அங்கே இருக்கிறார்கள்.

6. சக்தி வாய்ந்த யுதிமன்யு, வீரம் பொருந்திய உத்தமௌஜன், சுபத்திரையின் செல்வன் அபிமன்யு, திரௌபதியின் ஐந்து புதல்வர்கள் ஆகிய அனைவரும் மகாரதிகள்.

7. "அந்தணர்களில் சிறந்தவரே! நம் பக்கம் இருக்கும் பெரும் வீரரர்களையும், தளபதிகளையும் நீங்கள் அறிவீர்கள். ஆயினும், அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

8. "தாங்கள், பீஷ்மர், கர்ணன், வெற்றியைத் தவிர வேறு எதையும் சந்திக்காத கிருபர், அஸ்வத்தாமா, விகர்ணன், சோமதத்தரின் புதல்வன் பூரிஸ்ரவன்.

 9. "இவர்களைத் தவிர, பல்வகை ஆயுதங்களையும், அஸ்திரங்களையும் ஏந்தியிருக்கும், போர்முறைகளில் நன்கு தேர்ச்சி பெற்ற மேலும் பல வீரர்கள் எனக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாக இங்கே இருக்கிறார்கள்.

10. "பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டுள்ள நமது படையை யாரும் வெல்ல முடியாது. ஆனால் பீமனால் பாதுகாக்கப்பட்டிருக்கும் அவர்கள் படையைச் சுலபமாக வென்று விடலாம்.

11. "அதனால், நீங்கள் அனைவரும் உங்கள் நிலைகளில் இருந்தபடியே, பீஷ்மரை எல்லாப் பக்கங்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்."

12. கௌரவர்களின் தாத்தாவும், அனைவரிலும் வயதில் மூத்தவருமான பீஷ்மர் துரியோதனனை உற்சாகப்படுத்தும் வகையில் சிங்கம் போல் கர்ஜனை செய்து விட்டுத் தனது சங்கை எடுத்து ஊதினார்.

13. அதைத் தொடர்ந்து பல சங்குகளும், முரசுகளும், ஊதுகுழல்களும் முழக்கமிட்டன. இதனால் எழுந்த சத்தம் பெரும் கூச்சலாக ஒலித்தது.

14. பிறகு, வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் அமர்ந்தபடி, கிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்கள் தெய்வீகமான சங்குகளை ஊதினர்.

15. பாஞ்சஜன்யம் என்ற சங்கை கிருஷ்ணர் ஊதினார். தேவதத்தம் என்ற சங்கை அர்ஜுனன் ஊத, பௌண்டம் என்ற பெரும் சங்கை, செயற்கரிய செயல்களைச் செய்யும் வல்லமை பெற்ற பீமன் ஊதினான்.

16. குந்திபுத்திரரான யுதிஷ்டிரர் அனந்த விஜயம் என்ற தனது சங்கை ஊதினார். நகுலனும், சகாதேவனும், சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற தங்கள் சங்குகளை ஊதினர்.

17. சிறந்த வில்லாளியான காசி அரசன், மகாரதியான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வெல்வதற்கு அரியவனான சாத்யகி ஆகியோரும் அவ்வாறே செய்தனர் (தங்கள் சங்குகளை ஊதினர்).

18. பூவுலகின் தலைவரே! துருபதன், திரௌபதியின் ஐந்து புதல்வர்கள், சுபத்திரையின் புதல்வனும், வலிமையான தோள்களை உடையவனுமான அபிமன்யு ஆகியோரும் தனித்தனியே தங்கள் சங்குகளை ஊதினர்.

19. இதனால் எழுந்த பெரும் ஓசை மண்ணிலும் விண்ணிலும் எதிரொலித்து திருதிராஷ்டிர புத்திரர்களின் இதயங்களைப் பிளந்தது.

20, 21. பூலோகத்தின் சக்ரவர்த்தியே! உங்கள் புதல்வர்கள் தனக்கு எதிரே அணிவகுத்து நிற்பதையும், அஸ்திரங்கள் ஏவி விடப்படத் தயாராக இருந்ததையும் கண்ட பாண்டுபுத்திரனான அர்ஜுனன், வில்லைக் கையில் எடுத்தபடியே கிருஷ்ணரிடம் கூறினான்: "கிருஷ்ணா, தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்து.

22. "போருக்காக அணி வகுத்திருக்கும் வீரர்களை - நான் யார் யாருடன் எல்லாம் போரிட வேண்டுமோ அந்த வீரர்களை - நான் நன்றாகப் பார்க்கும் வரை தேரை அங்கேயே நிறுத்தி வை.

23. "தீய எணணம் கொண்ட துரியாதனுக்காகப் போரிடத் தயாராக இங்கே அணி வகுத்திருக்கும் வீரர்களில் என் நலம் நாடுபவர்கள் யார் யார் என்று நான் பார்க்க வேண்டும்."

24, 25. அரசே! அர்ஜுனன் இவ்வாறு கூறியதும், கிருஷ்ணர் அந்த பிரும்மாண்டமான தேரை, இரு சேனைகளுக்கும் இடையே, பீஷ்மர், துரோணர், பல அரசர்கள் ஆகியோர் முன் கொண்டு போய் நிறுத்தி விட்டு, "அர்ஜுனா! இங்கே அணிவகுத்திருக்கும் கௌரவர்களை நன்கு பார்த்துக் கொள்!" என்றார்.

26-29. அந்த இடத்தில் இருந்தபடி அர்ஜுனன், இரு சேனைகளிலும் இருந்த தன் தந்தையின் சகோதரர்கள், பாட்டனார்கள், ஆசிரியர்கள், தாய்மாமன்கள், சகோதரர்கள், ஒன்று விட்ட சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள், அவன் நலத்தை விரும்புபவர்கள் ஆகியோரைப் பார்த்தான். தனது எல்லா உறவினர்களையும் அங்கே ஒருங்கே பார்த்த அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டு, மன வருத்தத்துடன் இவ்வாறு கூறினான்.

அர்ஜுனன் கூறினான்:
கிருஷ்ணா! போரிடுவதற்காக இங்கே அணி வகுத்திருக்கும் எனது உறவினர்களைப் பார்க்கும்போது, என் உடல் உறுப்புகள் செயலிழந்து போனது போல் உணர்கிறேன். எனது நாக்கு வறண்டு போகிறது. என் உடல் நடுங்குகிறது. என் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன.

30. என் வில் காண்டீபம் என் கையிலிருந்து நழுவுகிறது. உடல் முழுவதும் என் தோல் எரிகிறது. என் தலை  சுற்றுவது போல் இருக்கிறது. என்னால் நிற்கக் கூட முடியவில்லை.

31. கேசவா! சில கெட்ட சகுனங்களையும் நான் காண்கிறேன். என் உறவினர்களையும், நண்பர்களையும் போரில் கொல்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை.

32. கிருஷ்ணா! வெற்றியிலோ, அரசாள்வதிலோ, சுகங்களிலோ எனக்கு நாட்டம் இல்லை. அரசாள்வதாலோ, ஆடம்பரங்களாலோ என்ன பயன்? ஏன், இந்த உலக வாழ்க்கையாலேயே என்ன பயன்?

33, 34. நாம் யாருக்காக இந்த அரியணை, ஆடம்பரங்கள், சுகங்கள் ஆகியவற்றை அடைய நினைகிறோமோ, அவர்கள் எல்லாம் - ஆசிரியர்கள், தாய், தந்தை ஆகியோரின் சகோதரர்கள், பிள்ளைகள், பாட்டனார்கள், மாமனார்கள், பேரர்கள், மைத்துனர்கள், மற்ற உறவினர்கள் எல்லோரும் - இந்தப் போர்க்களத்தில் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் பணயம் வைத்து அணி வகுத்து நிற்கின்றனர்.

35. கிருஷ்ணா! அவர்கள் என்னைக் கொல்லலாம். ஆனால் மூவுலகும் என் ஆளுகைக்குள் வரும் என்றாலும், நான் அவர்களைக் கொல்ல விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது, கேவலம் இந்த மண்ணுலகை ஆள்வதற்காக நான் எப்படி அவர்களைக் கொல்ல முடியும்?

36. கிருஷ்ணா! திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொல்வதால் நமக்கு எப்படி மகிழ்ச்சி கிட்டும்? இந்தக் கயவர்களைக் கொல்வதன் மூலம் நம்மிடம் பாவம்தான் வந்து சேரும்.

37. அதனால் நமது உறவினர்களான திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொல்வது நமக்கு அழகல்ல. நமது உறவினர்களைக் கொன்று விட்டு நம்மால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

38, 39. பேராசை இவர்கள் மனங்களை செயலிழக்கச் செய்து விட்டதால், தங்கள் வம்சத்தையே அழிப்பதும், நண்பர்களை விரோதிகளாகப் பார்ப்பதும் எத்தகைய தீய செயல்கள் என்பதை இவர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணா, நமது குடும்பத்தை அழிப்பது எத்தகைய பாவச் செயல் என்பதை உணர்ந்திருக்கும் நாம் ஏன் இந்தக் கொடிய செயலிலிருந்து விலகக் கூடாது?

40. ஒரு குடும்பம் அழிக்கப்படும்போது, அந்தக் குடும்பம் காலம் காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த மரபுகளும் அழிந்து போகின்றன. நன்மை அழிக்கப்பட்டு விட்டதால், (மீதமிருக்கும்) அந்தக் குடும்பம் தீமையின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

41. கிருஷ்ணா! தீமை ஆட்சி செய்யும்போது, அந்தக் குடும்பத்துப் பெண்கள் ஒழுக்கம் தவறுவார்கள். பெண்கள் ஒழுக்கம் தவறுவதால், ஜாதிகள் கலந்து போகும் நிலை ஏற்படும்.

42. ஜாதிகள் கலந்து போவதால், ஒரு இனமே அழிந்து போவதுடன், அந்த இனம் நரகத்துக்குப் போகும். தவசம், தர்ப்பணம் போன்ற சடங்குகள் மூலம் உணவும், நீரும் கிடைக்காமல் அந்த இனத்தின் முன்னோர்கள் நலிந்து போவார்கள்.

43. ஜாதிகள் கலப்பதால் ஏற்படும் இந்த விளைவுகளால், இனத்தை அழித்தவர்களின் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகள் அழிந்து போகும்.

44. கிருஷ்ணா! தங்கள் குடும்பம் பின்பற்றி வந்த மரபுகளைத் தொலைத்தவர்கள் நெடுங்காலம் நரகத்தில் உழல நேரிடும்.

45. நமக்குச் சிந்திக்கும் திறன் இருந்தும், அரியணை மோகத்தாலும், சுகங்களின் ஈர்ப்பினாலும் உந்தப்பட்டு, நம் உறவினர்களைக் கொல்லவும் துணிந்ததன் மூலம் நம் மனத்தைப் பாவத்தில் செலுத்துகிறோம்.

46. ஆயுதம் எதையும் ஏந்தாமல், எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் இருக்கும் நிலையில், ஆயுதம் ஏந்திய திருதராஷ்டிரரின் புதல்வர்களால் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.

47. சஞ்ஜயர் கூறினார்:
தன் மனம் துயரத்தால் அலைக்கழிப்பட்டதால் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தன் கையிலிருந்த வில்லையும், அம்புகளையும் கீழே போட்டு விட்டுத் தேரின் இருக்கையில் சாய்ந்தான்.

அத்தியாயம் 2 - ஆத்மாவுக்கு அழிவில்லை

No comments:

Post a Comment